கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது. தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர். குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது. ஆனால் அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலைவாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.
கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.