பொலிஸ் தடுப்புக்காவலில் 29 வயது இளைஞர் மரணம் - நியாயம் கோரி கதறும் குடும்பத்தினர்..!
அக்டோபர் 25 அன்று பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயது நபரொருவர், ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற அந்த நபர், போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் போது கைது செய்யப்பட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அறிக்கையொன்றில், குறித்த இளைஞர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கப்பட்டதாகவும், அவரது உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு மருத்துவ உதவி வழங்குவதில் பொலிஸார் தாமதம் ஏற்படுத்தியதாகவும் முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்
குமாரவினால் நடக்க முடியாத நிலையில், விசாரணைக்குப் பின்னர் பொலிஸாரே அவரை மீண்டும் பொலிஸ் சிறையறைக்குத் தூக்கிச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், வாயிலிருந்து இரத்தம் வடிந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பின்னரே பொலிஸார் அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அங்கு சென்றடைந்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், குமாருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நபர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
இருப்பினும், பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர், இரண்டாவது நபர் காணாமல் ஆக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், அவை பொய்யானவை என்று தெரிவித்தார். பொலிஸ் காவலில் எடுக்கப்படும் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாரின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வூட்லர், சட்டவிரோதமாகச் செயல்படும் எந்தவொரு அதிகாரியும், அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

குமார பொலிஸ் காவலில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கச்சார்பற்ற விசாரணை தேவை
ஹோமாகம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் இது குறித்து ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் காரணத்தைக் கண்டறிய, நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை ஆகியன இன்று(26.10.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உறவினர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri