எரிவாயு தட்டுபாடு காரணமாக நாட்டில் சில பகுதிகளில் அமைதியின்மை(Photo)
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்று16) காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் இன்று (16) வங்காலை கிராமத்திற்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாமல் வேறு கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்காலை கிராமத்தில் உள்ள 4 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் பிரதான வீதியை மறித்து எரிவாயு கொள்கலன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, வங்காலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது கிராம மக்கள் தமது பிரச்சினைகளை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தமது கிராமம் சமையல் எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து
புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.
இந்த விடயம் பொலிஸார் ஊடாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சமையல் எரிவாயுவை வழங்க எதிர்வரும் புதன்கிழமை (20) நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் வீதியை மறிக்காது
அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
நுவரெலியா
நுவரெலியா பிரதான நகரில் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்று (16) லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நுவரெலியா பொலிஸாரின் தலையீட்டில் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்து இறுதியில் கிடைக்காத 20 நபர்களுக்கு எரிவாயு வழங்கப்படும் எனவும் ஏனையவை கூப்பன் முறையில் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.



