எரிவாயு இன்மையால் மூடப்படும் உணவகங்கள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு விநியோகம் இல்லாததால், பெண்களால் இயக்கப்பட்டு வரும் இரண்டு உணவகங்கள் உட்பட பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்கள் எரிவாயு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இன்றும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூடப்படும் அபாய நிலையில் உணவகங்கள்
முல்லைத்தீவு நகரில் உள்ள அம்மாச்சி உணவகம் மற்றும் அங்கயற்கண்ணி உணவகம் என்பன மூடப்பட்டுள்ளதால் வெளி இடங்களில் இருந்து வரும் மக்கள் உணவு தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நகர் பகுதியில் ஒரு சில உணவகங்களை தவிர, பல உணவகங்கள் மூடப்பட்ட நிலையிலே காணப்படுகின்றன.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசம் மக்கள் தொகை அதிகமாக காணப்படும் பிரதேசங்களாகும்.
ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்
சமீபத்தில் நாட்டிற்கு போதியளவு எரிவாயு கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி மக்களுக்கு எரிவாயு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, 648 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு விநியோகத்தில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கு 248 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதோடு பொது விளையாட்டு மைதானத்தில் மக்களுக்காக 400 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், பல மக்கள் ஏமாற்றத்துடன் எரிவாயு கிடைக்காத நிலையில் திரும்பி சென்றுள்ளார்கள்.
மக்கள் விடுக்கும் கோரிக்கை
முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் மற்றும் அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் குடும்பங்கள், எரிவாயு இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசங்களுக்கும் எரிவாயுவினை விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.