இரண்டு மாதத்திற்கு பின் சமையல் எரிவாயு விநியோகம்
இரண்டு மாதத்திற்கு பின் ஹட்டன் பகுதியில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகத்தின் போது பல்வேறு மோசடிகள் இடம்பெற்றதாகவும், இதனால் மக்களுக்கு சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் முறை
அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தார ரூவனி கமகே தலைமையில் வீட்டு மின்சார பட்டியலுக்கேற்ப கடந்த மே மாதம் டோக்கன்கள் பெற்று கொடுக்கப்பட்டுள்ளன.
முதலாவது தொகுதி கடந்த மே வருகை தந்த போதிலும், இரண்டாவது தொகுதி இன்றைய தினமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது தொகுதி விநியோகமும் டோக்கன் முறைக்கு அமையவே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனால் இன்று எரிவாயு விநியோகம் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றதுடன் பெரியதாக நீண்ட வரிசைகள் காணப்படவில்லை. எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசியின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் மாத்திரம் வருகை தந்திருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் வரிசை
கடந்த மூன்று தினங்களாக மக்கள் ஹட்டன் ஐ.ஓ.சி பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் காத்திருக்கின்றனர்.
வரிசையில் காத்திருப்பவர்களுக்கு ஹட்டன் பொலிஸாரால் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக பெட்ரோல் நிரப்பு நிலையத்திலிருந்து மல்லியைப்பூ சந்தி வரை, முச்சக்கரவண்டிகளும் மோட்டார் சைக்கில்களும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.