இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை!விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகைக்கு எதிராகவும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3.2.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயமாக உள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை
குறித்த விடயத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையும், அடாவடித் தனமும், வட பகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயத்தில் மௌனமாக இருக்கின்றார்.கடற்றொழில் அமைச்சரை நாங்கள் பல தடவை சந்தித்து, பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும்,அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
கோரிக்கை
நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும்,இந்த அரசாங்கமும்,குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

நாங்கள் உள்ளூரில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற தொழில் முறைமைகளையும் நிறுத்தி தருமாறு அரசிடம் கோரி இருக்கின்றோம்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகையை தடுக்க வேண்டும் என்பதே எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.