இரண்டு பிரதான தேர்தல்களையும் ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்க ஐ.தே.க. யோசனை
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவால் இன்று சிறிகொத்த கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்கள் நீடித்து நாட்டை மீட்பதே இந்த நேரத்தில் சிறந்த தெரிவாகும் என்று பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக இது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இது இன்றியமையாத விடயம் என்றும், அதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது மிகவும் ஜனநாயகமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டையும் இரண்டு வருடங்கள் ஒத்திவைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அது ஜனநாயகத்துக்கு எதிரானது என எவரேனும் கூறினால் அது தவறு என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
சமீபத்திய அறிக்கை
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சமீபத்திய அறிக்கை கடந்த வார இறுதி அறிக்கைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாகக் காணப்படுகின்றது.
நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி - ஒக்டோபர்
18 ஆம் திகதிக்கிடையில் நடைபெறும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல்
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறும் எனவும் அந்த அறிக்கைகளில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
"நான் பொறுப்புடன் கூறுகிறேன், உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவாலும் விடுகிறேன்" - என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறியதை தற்போது நினைவுகூரலாம்.
எவ்வாறாயினும், ரணிலின் பதவிக் காலத்தை நீடிக்க சட்டத்தில் இடமுண்டா எனப் பல கதைகள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |