ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக பலமான கூட்டணி
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முன்வரிசையில் அமர்ந்து ஆழ்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று(20.09.2025) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
முன்வரிசை ஆசனங்களில் ரணில் விக்ரமசிங்க மற்றும ரஞ்சித் மத்தும பண்டார, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் அமர்ந்திருந்திருந்தனர்.
பலமான கூட்டணி
மேலும், செந்தில் தொண்டமான், திகாம்பரம், மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், சம்பிக்க ரணவக்க உட்பட பிரபல அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது சாத்தியமாகலாம் என மாநாட்டில் பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்கத்திற்கு எதிரான பலமான கூட்டணி ஒன்று உருவாக்கப்படுவதும் ஆழமான சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு மாநாடு, பலமான கூட்டணிக்கு பலமாக அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
சஜித் பங்கேற்கவில்லை
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்கள் மீதான அனைத்து தடைகளையும் நீக்க ஐக்கிய தேசியக் கட்சி சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த ஆண்டு நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாம் நேற்று(19.09.2025) குறிப்பிட்டது போல, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மாநாட்டில் பங்கேற்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



