கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு
நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டமைக்கான காரணம்
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், மாத்தறையில் உள்ள வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
யுவதியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச்சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.