பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் மோதலில் இளைஞர்கள் குழு! மூவர் வைத்தியசாலையில்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் அப்பகுதி இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோதல் இடம்பெற்றமைக்கான காரணம்
மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உட்பட எட்டு மாணவர்கள் நேற்று முன்தினம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது உள்ளூர் இளைஞர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திற்கு வந்து பல்கலைக்கழக மாணவர்களை கேலி செய்யத்தொடங்கியதை அடுத்து மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவர்களின் தகவலில் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் உடைந்த போத்தல்களால் மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
நான்கு இளைஞர்கள் கைது
இதனையடுத்து பேராதனை போதனா வைத்தியசாலையில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் காயங்களுக்கு 37 தையல்களை போட வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து கால்நடை மருத்துவ பீட மாணவர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பேராதனை பொலிஸார், சந்தேகத்தின் பேரில் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.