யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (25.06.2023), ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பேராசிரியர் பதவி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றின் படி, பொறியியல் பீடத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். கே. அகிலன் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையில் பேராசிரியராகவும் , விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி க. பகீரதன் விவசாய உயிரியல் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன், இந்து நாகரிகத் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |