யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் கவனயீர்ப்பு போராட்டம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) நண்பகல் 12மணியளவில் நடைபெற்றுகின்றது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடு
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப்
பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப்
பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும்
தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக செய்திகள்: தீபன்
முதலாம் இணைப்பு
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (18.01.2024) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் (14.01.2024) (15.01.2024) ஆகிய தினங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக (16.01.2024) கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (18.01.2024) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே குறித்த போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் இன்று (18.01.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.
குறித்த தகவலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
விசேட பொதுக் கூட்டம்
அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் முன்றலில் காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் நடாத்துவதுடன் தொடர்ந்து விசேட பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.
எனவே பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் (18.01.2024) வியாழக்கிழமை காலை பணியிடங்களுக்குச் செல்லாது, காலை 09 மணிக்கு இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு வேண்டப்படுவதோடு, தவறாது ஊழியர் சங்க வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவது அவசியமானது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
மேலும் இன்றைய தினம் நடைபெறும் விசேட பொதுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.