காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டவர்: அமெரிக்கா எச்சரிக்கை
காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நாட்டிலிருந்து வெளியேறும் நோக்கில் பெருமளவானோர் குவிந்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக யுத்தம் நீடித்து வந்த நிலையில், தற்போது யுத்தம் முடிவுக்கு வரப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் காபூலில் அமைதி நிலவுகின்ற போதிலும் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குழப்பம் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்வதோடு, அமெரிக்காவும் பிற மேற்கத்தேய நாடுகளும் தங்கள் இராஜதந்திரிகளையும் பிரஜைகளையும் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதேவேளை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக கூடுதல் படைகளை அமெரிக்கா சர்வதேச விமான நிலையத்தில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும் கூட சர்வதேச விமான நிலையத்தை நெருங்க கூடாது என அவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.