பிரித்தானியாவின் புதிய அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு உயர் பதவி
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் மல்கம் ஜெயவர்தன என்பவரே இவ்வாறு உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய அரசில் உயர் பதவி
சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளராக கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையருமான ரணில் மல்கம் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.
மே 2020 முதல் செப்டம்பர் 2022 வரை, ரணில் மல்கம் ஜெயவர்தன பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்த ரணில் 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வடகிழக்கு ஹம்ப்ஷயரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 8, 2015 அன்று நடைபெற்ற பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் 35,573 வாக்குகளைப் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2017 பொதுத் தேர்தலிலும் ஜனவரி 2020 தேர்தலிலும் வெற்றி பெற்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.