OPEC அமைப்பில் இருந்து விலகிய ஐக்கிய அரபு இராச்சியம்: உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய அமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC+) குழுமங்களில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சுமார் 60 ஆண்டுகால உறவை முடிவுக்குக் கொண்டுவரும் இந்த முடிவு, உலக எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதாரப் பார்வை மற்றும் மாறிவரும் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
ஒபெக் அமைப்பின் அதிரடி முடிவு
ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாகச் செயல்படுவது, நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த விலகல் ஒபெக் அமைப்பிற்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஒபெக் அமைப்பின் மொத்த உற்பத்தித் திறனில் 15 சதவீதத்தை அமீரகம் கொண்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 2.9 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஐக்கிய அரபு இராச்சியம் வெளியேறுவதால், ஒபெக் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறையும். ஒபெக் அமைப்பின் தலைமையாகச் செயல்படும் சவுதி அரேபியா, இனி சந்தையை நிர்வகிப்பதிலும் மற்ற நாடுகளைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் கடும் சவால்களைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிசக்தி ஆய்வாளர் சவுல் கவோனிக் இந்த முடிவை "ஒபெக் அமைப்பின் முடிவின் ஆரம்பம்" என்று வர்ணித்துள்ளார்.
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றி மற்ற நாடுகளும் வெளியேறினால், இந்த அமைப்பு முற்றிலும் சிதையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1960 இல் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஓபெக் அமைப்பில், ஐக்கிய அரபு இராச்சியம் 1967இல் இணைந்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை நிலைநிறுத்துவதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஏற்கனவே அங்கோலா போன்ற நாடுகள் உற்பத்திக் கட்டுப்பாடு காரணமாக இவ்வமைப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஒரு வலுவான உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் வெளியேறியிருப்பது மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலிலும் உலக எண்ணெய் வர்த்தகத்திலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
இது உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பில் ஒரு அடிப்படை மறுசீரமைப்பாகப் பார்க்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்