எரிபொருள் விநியோகத்தில் குழப்பம் விளைவிக்கும் நபர்கள்(Photos)
நாடளாவிய ரீதியில் பல்வேறு வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்ற நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய பணிகளை குழப்பும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்திருப்பதாக மட்டக்களப்பு பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கவலை
இது தொடர்பாக மக்கள் மேலும் தெரிவிக்கையில், “எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மு.செல்வராஜாவின் ஒழுங்கமைப்பில் சிறந்த முறையில் இந்த எரிபொருள் நிரப்பும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த நிலையில் ஒன்றுவிட்ட ஒரு தினம் எரிபொருள்களை வழங்கி மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு ஓரளவு எரிபொருள்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டுள்ளார்.
எரிபொருள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அறுவடைசெய்யமுடியாமல் அழிவடையும் நிலையிலிருந்தபோது தனது தனிப்பட்ட முயற்சியினால் 15000லீட்டருக்கும் அதிகமான எரிபொருட்களை வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தினமும் ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தின் மத்தியிலேயே எரிபொருள் எந்தவித முறைகேடுகளுமின்றி இடம்பெறுகின்றது.
ஒரு சில அரசியல்வாதிகள் தமக்கு எரிபொருளை பல தடவைகள் பெறமுயற்சித்த வேளை அதனை தடுத்த நிறுத்தினார். அத்துடன் இந்த சீரான எரிபொருள் விநியோகத்தை சிலர் குழப்ப முற்பட்ட வேளைகளில் அவர்களை அடக்கி தனது பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்
தமது அரசியலுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்துவிடும் என்று மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மு.செல்வராஜா தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சிறந்த முறையில் செயற்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு அவரை அவமானப்படுத்த முயற்சிக்கும் செயற்பாடுகள் இங்கு எதிர்காலத்தில் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்வதில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தனது ஹோட்டல் திறப்பு விழாவுக்கு 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அதிகாரத்திலிருந்தவர்களை அழைத்து திறந்து வைத்தமையை அவர் அரசியலுக்கு வரப்போகின்றார் என்று கூறுவது சிறுபிள்ளை தனமான பேச்சாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முன்வைத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பில் சிறந்த நிர்வாக கட்டமைப்பினை முன்னெடுத்து தினமும் மக்களினது பாராட்டினை பெறும் ஒருவருக்கு எதிராக முறையற்ற வகையில் செயற்படுவோர் செய்யும் முறைப்பாடுகளைக்கொண்டு பொய்யான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து கொள்ளவேண்டும்”என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.