கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்! தீவிர விசாரணையில் பொலிஸார்
கிளிநொச்சி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிபுரம் சுட்ட தீவு காட்டுப்பகுதிக்குள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று 18.04.2026 ஆம் திகதி இரவு சுமார் 8.25 மணியளவில், குமாரபுரம் கிராம சேவகர் பிரிவின் கிராம அலுவலர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தச் சம்பவம் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
குமாரபுரம் பகுதியில் உள்ள சுட்டத்தீவு கோவில் அருகிலுள்ள வனப்பகுதியில் ஒருவரின் சடலம் கிடப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் என்.சி.ஓ தினேஷ்கரன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, கண்டெடுக்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால் இதுவரை அதன் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. மேலும், சடலம் ஆடையற்ற நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த நபருக்குச் சொந்தமான பொருட்களோ அல்லது முக்கிய தடயங்களோ இதுவரை எதுவும் மீட்கப்படாத நிலையில், இது மர்ம மரணமாகக் கருதப்படுகிறது.
கிளிநொச்சி பொலிஸார்
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று (19.04.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவானின் உத்தரவின் பேரில் சடலத்தின் பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மரணத்தின் காரணம் மற்றும் இது கொலைச் சம்பவமா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்களிடம் கிளிநொச்சி பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
