திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த போராட்டம்
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பரீட்சைகள் இல்லாமல் பொதுவான நியமனத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது "வரவு செலவு திட்டத்தில் 35000 வேலைவாய்ப்பினையும் பட்டதாரிகளுக்கே வழங்குவதாக உறுதி செய்", "ஓய்வுபெறும் முதியோரை பணியமர்த்தும் அரசே ஓய்வில்லாது போராடும் எம்மை ஓடவிடாதே", "படித்து பட்டம் பெற்றும் பதவி இல்லை", "வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகம் எதற்கு?", "வேண்டாம் வேண்டாம் போட்டி பரீட்சைகள் வேண்டாம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பெண் பட்டதாரி ஒருவர், 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை எந்தவொரு அரச நியமனங்களும் முறையான வகையில் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தின் நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்திருந்தார்கள். எனினும் இதுவரை எந்தவொரு பாதீட்டிலும் எமது பிரச்சினை தொடர்பாக பேசப்படவில்லை.
எனவே எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி பாதீட்டில் பட்டதாரிகளை ஏதோ ஒரு வகையில் அரசு உள்வாங்க வேண்டும். இது தனிப்பட்ட பட்டதாரிகளினுடைய பிரச்சினையோ அல்லது பட்டதாரிகளினுடைய குடும்பம் சார்ந்த பிரச்சினையோ இல்லை. இது ஒரு சமூகப் பிரச்சினையாகும். கிழக்கு மாகாணத்தில் 6000 வெற்றிடங்கள் உள்ளன. அதேபோன்று 6000 பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அதில் ஆசிரியர் வெற்றிடங்கள் 3000 உள்ளன.
ஆகையால், பிள்ளைகளினுடைய எதிர்காலத்தைப் பற்றி சமூகம் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். குறிப்பாக ஒரு பாடசாலையில் விஞ்ஞானம் படிப்பிக்கின்ற ஆசிரியர் கணிதம் படிப்பிக்கின்றார் அதேபோன்று தமிழ் படிப்பிக்கின்ற ஆசிரியர் வரலாறு படிப்பிக்கின்றார்.
இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு முறையான வகையில் கல்வி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு கற்பிக்கின்ற பாடம் தொடர்பான தகுதி இருக்கின்றதா என சமூகம் கவனித்தால் நாம் படித்துவிட்டு வந்து வீதியில் நிற்க வேண்டிய தேவை இருக்காது எனவும் தெரிவித்தார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/03cde79c-5b81-41ef-9639-e4a265efb774/25-67adf60064710.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2b2d459a-0687-4034-a798-5c441c1fa251/25-67adf600ea455.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0d7a5c71-caad-4e0e-bf46-d30688fecda0/25-67adf6017318f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f70b6921-bc92-434c-8f08-913df08dd3ef/25-67adf60204224.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/14556f65-74b6-4ef4-adf8-eb6baff9f546/25-67adf60288764.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f8de2918-6183-4dbf-995a-7d476594843b/25-67adf60315496.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8b3a23ac-50cc-4c1e-857e-f8e8e30467a2/25-67adf60393c37.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)