வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள்
நாங்கள் கடந்த ஐந்த நாட்களாக வீதியில் கிடந்து போராடிவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த எந்த அரசியல்வாதியும் இதுவரையில் தமக்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
ஐந்தாவது நாளாகவும் இன்றைய தினம் ஒன்றுகூடிய மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகளுக்கு நியமனங்கள்
““வேண்டும் வேண்டும் வேலைவேண்டும்,கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா,படித்த பரதேசிகளுக்கு என்று தீரும் இந்த அவலம்,எம்முடைய பட்டம் வானில்தான் பறக்குமா ” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஏனைய மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும்போது கிழக்குமாகாணம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என இங்கு பட்டதாரிகளினால் கேள்வியெழுப்பப்பட்டது.
மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் பட்டாதரிகள் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |