விபரீத அரசியலின் விகார விளைவுதான் பாதாள உலகம் - ஸ்ரீநேசன் எம்.பி ஆதங்கம்
இலங்கை அரசியலில் அடிப்படைவாதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் கலந்து விட்டது.இப்படியான விபரீத அரசியலின் விகாரமான விளைவுகளில் ஒன்றாகவே பாதாள உலக உறுப்பினர் தோன்றியுள்ளதுடன், தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் நேற்று(31.10.2025) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய அரசியல்வாதிகளின் அடியாட்களாக
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அடிப்படைவாத அரசியலுக்கு இனவாதம், மதவாதம் என்பது இன்றியமையாத தேவைகளாக உள்ளன.
வாக்காளர்களின் 74 வீதமான சிங்கள வாக்குகளை இலக்காகக் கொண்டதாக சிங்கள அரசியல் காணப்படுகின்றது.

அதற்காக சிங்கள இனவாதம் தேர்தல்களின் போது விதைக்கப்படுகின்றன. இதனால், இனவாத வெற்றிகள் கிடைக்கின்றன.
அதேவேளை, இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் சீர்குலைக்கப்பட்டுள்ளன. மேலும் இனமுரண்பாடு, இனவன்முறை, இனக்கலவரம் இனமோதல், இனப்போர் இனவழிப்பு என்பன தோற்றுவிக்கப்படுகின்றன.
மேலும், தமிழர்களுக்கு எதிராக 1956இல் இருந்து 2009 வரை இனவழிப்புகளில் ஈடுபட்ட படையினரோ, குண்டர்களே, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதில்லை அல்லது நிறுத்தப்படுவது அரிதாகவுள்ளது.
இதனால், படுகொலைகள் செய்தவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பி விடுகின்றனர். மேலும் தண்டிக்கப்படாத குற்றவாளிகள் முக்கிய அரசியல்வாதிகளின் அடியாட்களாக மாறுகின்றனர்.
அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக..
அரசியல்வாதிகளின் அடிப்படைவாதம், மோசடி அரசியல், வன்முறை அரசியல் என்பவற்றுக்கு தண்டிக்கப்படாத குற்றவாளிக் குண்டர்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.
இவர்களை அந்த அரசியல்வாதிகள் தமது தேவை உள்ளவரை பாதுகாக்கின்றனர். இவர்கள் கறுப்பு வியாபாரம், கூலிக்கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், பாலியல் பலாத்காரம் என்பவற்றில் ஈடுபடுகின்றனர்.

ஜே.ஆர் ஜெயவர்தனாவின் ஆட்சியில் இருந்து ராஜபக்சக்களின் ஆட்சிகள் என்று பாதாள உலகர்களின் பங்களிப்புகளைப் பார்க்க முடிகின்றது.
அண்மையில், கொல்லப்பட்ட கஜ்ஜா இதற்கோர் உதாரணமாகும். விபரீதமான அடிப்படைவாத மோசடி அரசியல்வாதிகளின் விகாரத் தோற்றங்களாக உருவாக்கப்படும் பாதாள லோகர்கள் குறுங்கால வாழ்வியலுக்கே உரித்துடையவர்களாகின்றனர்.
இவர்கள் அரசியல்வாதிகளின் விபரீத தேவைகளுக்குப் பயன்பட்டு, விகாரத் தோற்றங்களைக் காட்டிய பின்னர், கொல்லப்படுகின்றனர், சிறைகளுக்குள் வாழ்கின்றனர், தலைமறைவாகவும் வாழ்கின்றனர்.
இவர்கள் விபரீத அரசியலின் விகார விளைவுகளாகவே கணிக்கப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக, பாதாளலோக இளைஞர்கள் தமது வாழ்வையே பலியிடுகின்றனர். இவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வு, தீர்வு அவசியமானதாகும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |