தேசிய பாதுகாப்பின் பலவீனத்தால் புத்துயிர் பெறும் பாதாளக் குழுக்கள்: விமல் வீரவன்ச பகிரங்கம்
தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து வரும் அதேவேளை, பாதாள உலகக் குழுக்கள் மீண்டும் உயிர் பெற்று வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் தினந்தோறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
துப்பாக்கிச்சூடு
மித்தெனிய பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது பாதாள உலகக் குழுவினர் உயிர் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்து வருகின்றது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அடிப்படை காரணிகள் இன்றி இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருபோதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் பொலிஸாரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் தமக்குரிய பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கான அர்ப்பணிப்பு அவர்கள் மத்தியில் குறைவடையக் கூடும்.
தேசிய பாதுகாப்பு
இதேவேளை, மறுபுறத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரைப் பழிவாங்கும் படலங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இவை அனைத்தின் ஊடாகவும் நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்து கொண்டிருக்கின்றது. தற்போது பழைய குற்றங்களுக்காகக் கடற்படையினரும் கைது செய்யப்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்திய குழுவினர் பலவீனப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பலவீனமடைவதால்தான் பாதாள உலகக் குழுவினர் தலைதூக்குகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. அவற்றை நிறுத்தக் கூடிய இயலுமை இந்த அரசுக்கு இல்லை.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசுக்கு அந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
