உலகுக்கு சிவப்பு எச்சரிக்கை: 2024 வானிலை தொடர்பில் ஐ. நா வெளியிட்ட அறிக்கை
தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் பூமியின் வெப்பநிலையானது தற்போது 1.45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய காலநிலை அறிக்கையானது ஆண்டுக்கு ஒருமுறை ஐ.நாவின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சராசரி வெப்பநிலை 174 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளது.
உலக வானிலை அமைப்பு
தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடலின் வெப்பநிலை 65 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் 90 சதவிகித கடல்பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் செலஸ்டி சாலோ கூறுகையில், "உலகுக்கு உலக வானிலை அமைப்பு சிவப்பு எச்சரிக்கையை வழங்கி வருகிறது.
கடந்த 2023இல் நாம் எதிர்கொண்டது, குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவான கடல் வெப்பம், பனிப்பாறை உருகுவது, அண்டார்டிகாவில் கடல் பனி உருகி வருவது குறிப்பாக கவலைக்குரியவை.
கடல் வெப்பம் குறிப்பாக கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அது, கிட்டத்தட்ட மீளமுடியாத அளவுக்கு நிலைமையை தலைகீழாக புரட்டி போடுகிறது. இந்த போக்கு உண்மையில் மிகவும் கவலையளிக்கிறது.
காலநிலை மாற்றம்
வளிமண்டலத்தை விட அதிக நேரம் வெப்பத்தை வைத்திருக்கும் நீரின் பண்புகளே இதற்கு காரணமாகும்" என்றார்.
உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
கடந்தாண்டு, இதுவரை கண்டிராத காலநிலை பிரச்சினைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம்.
இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு, காலநிலை பிரச்சினைகள் மேலும் மோசமடையும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, கடலின் வெப்பம் அதிகரிப்பது, கடலில் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |