ஐ.நா வடக்கில் இருந்து வெளியேறியமையே யுத்தம் நடக்க காரணமாக அமைந்தது: சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா வடக்கில் இருந்து முன்னறிவித்தலின்றி வெளியேறியது சாட்சியம் இல்லா யுத்தம் நடக்கக் காரணமாக அமைந்தது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர்டேர்க்கின் இலங்கைப் பயணம் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அவரது பயணம் கொழும்புடன் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இந்த அதிர்வலைகள் உருவாகியிருக்காது. தமிழர் தாயகத்திற்கும் பயணம் செய்த படியால் தான் இவை உருவாகியிருக்கின்றன.
வோல்கர் டேர்க்கின் இலங்கைப் பயணம்
அரசாங்கத்திற்கும் இது சங்கடமான நிலை தான். அரசாங்கம் அவரது பயணத்தை கொழும்புடன் மட்டும் மட்டுப்படுத்தவே விரும்பியிருந்தது. அரசாங்கம் அவரை அழைத்ததன் நோக்கமே செப்ரம்பரில் வரப்போகும் புதிய பிரேரணையில் இலங்கை தொடர்பாக கனதியான விடயங்கள் உள்ளடங்குவதைத் தடுப்பதுதான். அந்த நினைப்பில் தற்போது மண் விழுந்துள்ளது. தமிழ் சிவில் அமைப்புகள் ஆணையாளர் செப்டெம்பருக்கு முன்னர் பயணம் செய்வதை விரும்பியிருக்கவில்லை.
புதிய பிரேரணையின் கனதி குறைந்துவிடும் என்பதற்காகத்தான் அவர்கள் விரும்பியிருக்கவில்லை. தற்போது வரவேண்டாம் என்றே அவை கேட்டிருந்தன. அவர் வருவது உறுதி என தெரிந்த பின்னர் தான் தாயகத்திற்கும் வர வேண்டுமென வலியுறுத்தல்களை விடுத்தன. குறிப்பாக செமமணிப் புதைகுழிகளை பார்வையிட வேண்டும் என வலியுறுத்தல்களை விடுத்தது.
ஆணையாளரின் ஆரம்ப நிகழ்ச்சி நிரலில் தாயகப் பயணம் இருக்கவில்லை. பின்னரே நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு தாயகப் பயணமும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. ஆணையாளரும் மக்களைச் சந்திப்பதில் கனவானாக நடந்து கொண்டார். திருகோணமலையில் மக்கள் போராட்டத்தை நேரடியாக பார்வையிட்டார். மக்கள் கவலைகளை ஆறுதலாக கேட்டு மகஜரையும் பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் வருகை தந்த போது செம்மணிப் புதைக்குழிகளையும் பார்வையிட்டு அணையா விளக்கு போராட்டத்திலும் கலந்து கொண்டார். அணையா விளக்கிற்கு அஞ்சலியும் செலுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு தரப்பினருடனும் சுமூகமாக கலந்துரையாடி மனுக்களையும் பெற்றுக் கொண்டார். தமிழ்க் கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் “மக்கள் செயல்” அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்குப் போராட்டம் பல அடைவுகளைப் பெற்றிருக்கின்றது என்றே கூறலாம். அதில் முதலாவது மக்களை திரளாக்கியமையாகும்.
“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு பின்னர் மக்கள் தாமாகவே திரளாகக் கலந்து கொண்டமை இப் போராட்டத்தில் தான். “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்தை சுமந்திரன் கடத்திச் செல்வதற்கு முயற்சித்தார். ஆனால் இந்தப் போராட்டத்தை எந்த அரசியல் கட்சிகளாலும் கடத்திச் செல்ல முடியவில்லை. இன்று தமிழ் அரசியல் கட்சிகள் மக்களைத் திரளாக்கும் ஆற்றலை இழந்துவிட்டன. ஏற்றி இறக்கும் ஆற்றலும் குறைந்து விட்டது. இப் போராட்டத்தில் ஏற்றி இறக்கல் இடம்பெறவில்லை. தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் அரசியல் கட்சிகளால் இன்று வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியாது. அந்த ஆற்றல் கட்சிகளுக்கு அறவே இல்லை எனக் கூறலாம் கட்சிகள் மீதான மக்களின் அதிர்ப்தி இன்று கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கின்றது.
சிவில் அமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்க முயல்வது மகிழ்ச்சியடையக் கூடியதாக உள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் ஒரு வலுவான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பலாம். தமிழ் மக்களுக்கு இன்று பேரினவாத ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்தல், சர்வதேச அரசியலைக் கையாளல்;, தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி நிலையைத் தடுத்தல் என மூன்று பெரும் நெருக்கடிகள் உள்ளன. ஒரு வலுவான அரசியல் இயக்கத்தினாலேயே இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியும். இரண்டாவது அடைவு மனித உரிமைகள் உயர்ஸ்;தானிகருக்கு அனுபவ ரீதியாக நிலைமைகளைப் புரிய வைத்தமையாகும். பல விடயங்களை அவர் அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டார். செம்மணி அனுபவம் மக்களின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்பதை தனக்கு உணர்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
மனிதப் புதைகுழி
உண்மைகளை ஏற்பதும் உண்மைகளை வெளிப்படுத்துவதுமே நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் எனக் கூறியிருக்கின்றார்.காணிப் பறிப்பின் துயரத்தை தற்போது தான் தான் அடைந்ததாக கூறியிருக்கின்றார். மனிதப் புதைகுழிகளுக்கு தடயவியல் நிபுணத்துவ விசாரணை அவசியம் என கூறியிருக்கின்றார். உள்ளகப் பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை கூறியிருக்கின்றார். இவையெல்லாம் அனுபவ ரீதியாக அவர் பெற்றுக்கொண்ட விடயங்கள். மூன்றாவது விவகாரத்தை மீண்டுமொரு தடவை சர்வதேசரீதியாக பேசு பொருளாக்கியவையாகும். ஊடகங்களும் இதற்கு வலுவான முக்கியத்துவத்தை கொடுத்தன.
பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உப போராட்டங்களும் பேசுபொருளாக்குவதில் பங்காற்றியுள்ளன. கிளிநொச்சியில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நான்காவது புதிய தலைமுறைக்கு வரலாற்றை கடத்தியமையாகும். வரலாறு கடத்தல் என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடாகும். அரசியல் தலைமையும் பலவீனமாகியிருக்கின்ற சூழலில் குறிப்பாக 2000 க்கு பின்னர் பிறந்த தலைமுறை வரலாறு பற்றி எதுவுமே தெரியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தான் நினைவு கூறல்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வரலாறு என்பது சிறந்த ஆய்வு கூடமும் சிறந்த நூலகமுமாகும். வரலாற்றை கடத்துவதில் அடையாளப் போராட்டங்கள் பெரிய பங்கினை வகிக்க மாட்டா. பேரெழுச்சிகளே வலிமையான பங்கினையாற்றும்.
ஐந்தாவது தமிழ்க் கட்சிகள் அதிர்ப்;தி வளர்ந்துள்ள நிலையில் சிவில் அமைப்புகள் முன்னிலைக்கு வந்தமையாகும் இது பற்றி முன்னரும் கூறப்பட்டுள்ளது. அணையா விளக்குப் போராட்டத்தில் சில அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையும் இன்று முக்கிய பேசு பொருளாகியுள்ளது. மைய விவகாரத்தை இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பின்னுக்கு தள்ளி விட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றது. இது மிகை மதிப்பாக இருந்தாலும் எதிர்ப்புச் செயற்பாடுகள் முக்கிய பேசு பொருளாகியுள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. இது தொடர்பாக எதிர்ப்புகள் தவறானது என்ற கருத்தும் எதிர்ப்புகள் சரியானது என்ற கருத்தும் மக்களிடம் நிலவுகின்றது.
எதிர்ப்புச் செயற்பாடுகள் தவறானது எனக் கூறுவோர் அணையா விளக்கு போராட்டம் தேசமாகத் திரண்டு சர்வதேசத்திற்கு செய்தியைச் சொல்கின்ற போராட்டம். எதிர்ப்புச் செயற்பாடுகள் அந்த இலக்கைப் பலவீனப்படுத்தும் எனக் கூறுகின்றனர். ஏற்பாட்டாளர்களிடமும் இந்த கருத்து இருந்தது. எதிர்ப்பைக் கட்டுப்படுத்த அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறலாம் என முன்னரே கருதியமையினால் ஏற்பாட்டாளர்களையும், போராட்டக்காரர்களையும் வேறுபடுத்தி காட்டும் அடையாளம் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. உணர்வு நிலையைப் பிரதிபலிக்கும் போராட்டமாக இருந்ததினால் எதிர்ப்பு செயற்பாடுகள் உருவாக நிறையவே சந்தர்ப்பங்கள் இருந்தன. மூத்த போராளி காக்கா அண்ணர் “தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானத்திற்கு எதிராகப் போராடுவது என்றால் அவரது வீட்டிற்கு முன்னாலேயோ தமிழரசுக் கட்சியினன் மாட்டின் வீதி தலைமைச் செயலகத்திற்கு முன்னாலேயோ போராடியிருக்கலாம்.” எனக் கூறியிருந்தார்.
இவர்களுக்கு எதிராகப் போராடுகின்ற களம் இதுவல்ல என்பதே இந்தத் தரப்பினரின் அபிப்பிராயமாக இருந்தது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு எதிரான செயற்பாட்டையும் இந்த தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு சரியானது எனக் கூறும் தரப்பினர் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படுகின்றவர்கள் தொடர்பாக இந்த எதிர்ப்புச் செயற்பாடுகள் உணர்வு நிலையை பிரதிபலிக்கும் இடங்களில் இயல்பானது எனக் கூறுகின்றனர.; மக்களின் அபிலாசைகளை மீறி நடப்பவர்கள் மக்களினால் தண்டிக்கப்படல் வேண்டும் என்பது இவர்களது கருத்தாக உள்ளது. சிவஞானத்திற்கு எதிரான செயற்பாடு ஈ.பி.டி.பி யுடன் கூட்டுச் சேர்ந்ததை ஒட்டியதாகவே இருந்தது. மக்களின் ஆணையை மீறி விட்டனர் என்பதே எதிர்த்தவர்களின் அபிப்பிராயமாக இருந்தது. தேர்தல் மூலம் தமிழரசுக் கட்சிகள் இணைந்து உள்;ராட்சி நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்பது மக்கள் ஆணையாக இருந்தது. இணைவு என்பது கொள்கை ரீதியாக இருக்கும் போதே அது அர்த்தமுடையதாக, நிரந்தரமானதாக இருக்கும்.
தமிழ்த் தேசியப் பேரவையினர் கொள்கை ரீதியான இணைப்புக்கு வருமாறே அழைப்பு விடுத்தனர்.கொள்கை ரீதியான கூட்டுக்கு செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்குள்ள தடையென்ன? அவர்கள் முன்வைத்த ஒப்பந்த ஆவணத்தில் முரண்பாடான விடயங்கள் என்ன? என்பதை சுமந்திரன் பிரிவினர் தெளிவுபடுத்தாமலேயே மக்களின் எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசிய அரசியலை பின்னிலைக்கு தள்ளினர். இந்தக் கோபம் மக்களிடம் இருப்பது இயல்பானது என்பது இத்தரப்பினரின் வாதமாக உள்ளது. இவ்வாறு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது தமிழ் அரசியலுக்கு புதிதல்ல. வரலாற்று ரீதியாகவே இச்சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
உரும்பிராய் தியாகி சிவகுமாரனின் மரணச் சடங்கிலும் இந்த எதிர்ப்பு பிரதிபலித்தது. சிவகுமாரனின் ஆயுத செயற்பாடுகளினால் குடாநாடெங்கும் அவன் தேடப்பட்டான். அவனை சிறிது காலம் தலைமறைவாக தமிழ்நாட்டிற்கு அனுப்ப இளைஞர்கள் முயற்சித்தனர். இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கதிரவேற்பிள்ளையிடம் உதவி கேட்டனர். கதிரவேற்பிள்ளை சிவகுமாரனை ஆயுதம் தூக்கச் சொல்லி நான் கூறினேனா? என எள்ளி நகையாடியதுடன் உதவிக் கோரிக்கையையும் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிவகுமாரனின் மரணச் சடங்கில் கதிரவேற்பிள்ளை உரையாற்ற முனைந்த போது கூக்குரல் எழுப்பி “துரோகியே வெளியே போ” எனச் சத்தமிட்டு தடுத்து நிறுத்தினர். நல்லூர் வீரமாகாளியம்மன் கோவிலில் அமிர்தலிங்கம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போதும் கூக்குரலெழுப்பி உண்ணாவிரதத்தை குழப்பினர்.
சர்வதேச விசாரணை
அண்மையில் மாவையின் மரணச் சடங்கின் போதும் இந்நிலை ஏற்பட்டது. சுமந்திரன் பிரிவினர் இறுதி சடங்கிற்கு செல்லாததினால் ஒருவாறு ஆபத்திலிருந்து தப்பினர். அமைச்சர் சந்திரசேகரன் மீதான எதிர்ப்பு செயற்பாட்டையும் இவ்வாறே நியாயப்படுத்துகின்றனர். சந்திரசேகரனின் கட்சியான ஜே.வி.பி யுத்தத்தில் பங்கெடுத்த கட்சி. 25000 இளைஞர்களை இராணுவத்திற்கு திரட்டிக் கொடுத்த கட்சி. அக்கட்சியினரின் கைகளில் தமிழ் மக்களின் இரத்தம் உள்ளது. அந்த இரத்தக்கறை படிந்த கரங்களுடன் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு எவ்வாறு அஞ்சலி செலுத்த முடியும் என்பது இத்தரப்பினரின் வாதமாக உள்ளது.
தவிர ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தேசிய மக்கள் சக்தியும் நிராகரிக்கின்றது. சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றது. இன அழிப்பைச் செய்த இராணுவத்தினரை பாதுகாக்கின்றது. ஜே.வி.பி யின் கடந்த காலமும் நல்லதல்ல, நிகழ்காலமும் நல்லதல்ல. எனவே கோபம் வருவது இயல்பானது என இத்தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியிருந்த போதும் தேசத்தில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள் தியாகிகளும் இருப்பார்கள்.துரோகிகளும் இருப்பார்கள் தேசமாகத் திரளுதல் என்பது எல்லோரையும் ஒரு இலக்கின் கீழ் இணைப்பதே தவிர சர்வதேச சமூகத்திற்கு செய்தியைச் சொல்ல விளைகின்ற போது தேசத்திரட்சி அவசியம் எனவே இவ்வாறான போராட்டங்களில் அக எதிர்ப்பு செயற்பாடுகளை தவிர்ப்பதே தமிழ்த் தேசிய அரசியலை ஆரோக்கியமாகக் கொண்டு செல்வதற்கு உதவிகரமாக அமையும்.
இங்கு போராட்டம் அக எதிர்ப்பு போராட்டமா? புற எதிர்ப்புப் போராட்டமா? என்பதை அடையாளம் காண்பது மிக அவசியம். இரண்டு தளங்களின் இயங்கு விதிகளும் வேறுபட்டவை. புறப் பிரச்சனைக்குள் அகப் பிரச்சனையைக் கொண்டு சென்றால் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தல் வீரியமாக அமையாது. இங்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் ஏதாவது சாதிப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இதற்கு வாய்ப்புகள் குறைவு. ஐ.நா மனித உரிமைகள் பேரவை சுயாதீனமான அமைப்பல்ல. சர்வதேச அரசியலுக்கு கீழ்பட்ட அமைப்பே சர்வதேச அரசியல் தமிழ் மக்களுக்கு சாதகமாக இன்னமும் வரவில்லை.
இந்தியா குறுக்கேயிருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு குறைவு. எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கேற்ப ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயற்படுவது கடினம். தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என வலுவான கோரிக்கை முன்வைத்த பின்னரும் கூட உள்ளக விசாரணையையே அவர் சிபார்சு செய்திருக்கின்றார் . ஆனாலும் புவிசார் அரசியல் போட்டி காரணமாக சர்வதேச சக்திகள் பொறுப்புக் கூறல் கோவையை தற்போதைக்கு மூட மாட்டா. அது ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விடயம். விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மட்டத்தில் தொடர்ந்து இருக்கும். எது எப்படியிருந்தாலும் தமிழ் மக்கள் ஐ.நா கதவுகளை தொடர்ந்தும் தட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் மனோகணேசன் கூறிய கூற்றுகள் இங்கு கவனிக்கத்தக்கவையாகும்.
ஐ.நா சபையும், மனித உரிமைகள் பேரவையும் இலங்கையில் தமிழ் மக்களை கைவிட்டு விட்டது. யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி சாட்சியம் இல்லா யுத்தம் நடக்கக் காரணமாக அமைந்துவிட்டது. இன்று யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்தும் பொறுப்புக் கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. போருக்கு மூல காரணமான இனப் பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை.” மனோகணேசனுக்கு வந்த துணிவு எமது தலைவர்களுக்கு வரவில்லை என்பது மிகவும் கவலை தான் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
