ஐ.நா. ஆணையரின் அறிக்கையை வரவேற்கின்றது கூட்டமைப்பு! சுமந்திரன்
ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது எனக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"விசேடமாக இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் சபையோடு இணங்கிச் செயற்படும் என்று ஜனாதிபதி கொடுத்த உத்தரவாதத்தைச் செயலில் காண வேண்டும் என்று ஆணையாளர் வலியுறுத்தியுள்ளதை நாம் அவதானித்துள்ளோம்.
இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தையும், வேறு சட்ட ஆட்சிக்கு முரணான விடயங்களையும் ஆணையாளர் சுட்டிக்காட்டியதையும் வரவேற்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாட்டுக்காக ஆணையாளருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
அதேபோல், சாட்சியங்களைச் சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கின்றோம்" - என்றார்.