சுவிஸ் ஞானலிங்கேச்சுரம் தமிழ்க்கோவிலுக்கு ஐ.நா தூதர் விஜயம்
மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் பேட்ரோ அர்ரோஜோ - அகுடோ, தனது சுவிட்ஸர்லாந்து (Switzerland) விஜயத்தின் போது அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கும் பயணம் செய்துள்ளார்.
அவர், இன்று (06.12.2024) இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பேட்ரோ அர்ரோஜோ - அகுடோ,1951 ஏப்ரல் 13ஆம் திகதி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் பிறந்தவர் ஆவார். அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், அரசியல்வாதி, இயற்பியலாளர் மற்றும் சரகோஸா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார். அவரின் ஆராய்ச்சி துறை தண்ணீரின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது.
சுவிஸ் விஜயம்
2020ஆம் ஆண்டு முதல், அவர் குடிநீர் மற்றும் நலவாழ்விற்கான பாதுகாப்பான அணுகல் என்ற மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது சுவிஸ் விஜயத்தின் போது, பல்சமய இல்லத்துக்கும், பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கும் பயணம் செய்துள்ளார்.
இதன்போது, ஈழத்தமிழர்களின் தொன்மை, வரலாறு, சுவிஸ் வாழ்வியல் முறை, எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இருபண்பாட்டின் வழியே சைவநெறி வழிபாடு தொடர்வதில் உள்ள கடினங்கள் குறித்து பேட்ரோக்கு விளக்கப்பட்டுள்ளது.
சுவைமிகு தமிழுணவு
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் பெண்களும் அருட்சுனையர்கள் ஆக முடியும் என்ற புது முன்னெடுப்பை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், ஸ்பானிய மொழியில் விளக்கியுள்ளார்.
அத்துடன், சிறப்பு தூதருக்கு சிவருசி. தரம்லிங்கம் சசிக்குமார் மற்றும் முருகருசி. சிவலிங்கம் சுரேஸ்குமார் ஆகியோர்களால் தமிழ்ப்பண்பாட்டு முறையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், சைவநெறிக்கூடத்தின் பொற்சால்வை வழங்கி அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, ஐக்கிய நாடுகள் பொதுப்பணிகளுக்கு சைவநெறிக்கூடம் முழு ஆதரவை வழங்கும் உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வாழ்த்துப் பத்திரம் தமிழ், ஆங்கில மற்றும் ஸ்பானிய மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.
அதில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மூலம் நீரின் மகத்துவத்தை உணர்த்திய செய்தியும், நீர் மனித உரிமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் திட்டத்திற்கு ஆதரவாக சைவநெறிக்கூடம் உறுதி மொழியையும் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தலைமையில் இயங்கும் சைவ உணவகத்தில் ஈழத்தமிழர் பாரம்பரிய உணவுகள் தரப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே நீரின் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் பண்பாட்டின் அழகையும் வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |