ஐ.நா வரைபு தீர்மானம் தமிழர்களால் நிராகரிப்பு
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் வரைபு தீர்மானத்தை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிராகரித்துள்ளனர்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னெடுத்து வரும் 6 நாடுகள் வெளியிட்டுள்ள வரைபு அறிக்கையில் இரண்டு பத்திகள் உள்ளன.
6 நாடுகள் வெளியிட்டுள்ள வரைபு அறிக்கை பத்திகள்
1.தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில், அதன் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையை வரவேற்கிறோம்.
2. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தீர்மானம் 51/1 அடிப்படையில் தொடர்புடைய அனைத்து பணிகளையும் நீட்டிப்பது, அவையில் 58ஆவது அமர்வில், ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மொழியாக ஒரு அறிக்கையை அளிப்பது, மற்றும் தமது 60ஆவது அமர்வின் போது, இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய முழுமையான அறிக்கையை அளிப்பர் என தீர்மானிக்கிறது. அந்த வரைபு தீர்மானம் இந்த அமர்வில் வாக்களிப்புக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ள கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, மலாவி, மொண்டநிக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய ஆறு நாடுகளின் முக்கிய குழுவிடம், 60ஆவது அமர்வு வரை இலங்கைக்கு மேலும் அவகாசம் அளிப்பது, கடந்த 15 ஆண்டுகளாக தமது உறவுகளை தேடுபவர்களின் வலி மற்றும் வேதனைகளை அதிகரிக்கவே செய்யும் என கலந்துரையாடல்களில் பங்குபற்றிய தமிழர் தரப்பினர் கூறினர்.
அந்த முக்கிய குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்றில், ஐ நா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் பங்குபெற சென்றிருக்கும் தமிழர்கள், இந்த வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன கருதுகிறார்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் என்ன சொல்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
“இது பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தவில்லை” என உலகத் தமிழர் பேரவையின் ஐ.நாவிற்கான பிரதிநிதி நிஷா பீரிஸ் கூறுகிறார்.
மியன்மார் தீர்மானம்
மியன்மார் குறித்த தீர்மானம் போன்று, இந்த தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை கூற வேண்டும். அந்த தீர்மானத்தில், ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்யா மக்களே பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மியன்மாரைப் போன்று, பாதிக்கப்பட்ட தமிழர்கள் என்ற வகையில், இலங்கையிலுள்ள தமிழர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்பட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். மேலும் இலங்கை நிலவரங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க சிறப்பு அறிக்கையாளர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்”.
“நீதி கிடைக்காமலே நாங்கள் உயிரிழக்கும் நிலைக்கு விடாதீர்கள்” எனற இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் உறவினர்களின் சங்கத்தின் செயலளரான லீலாதேவி ஆனந்தநடராஜா உருக்கமாக வேண்டினார்.
”பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கம் சாத்தியமில்லை” என்று முக்கிய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் தங்களது உரைகளின் போது தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
அந்த கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் குழுக்கள் மற்றும் தனி நபர்கள், ஒருமித்த குரலில் “அந்த வரைபு தீர்மானம் மாற்றி எழுதப்பட வேண்டும், அதில் இலங்கைக்கு ஒரு சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படுவது பரிந்துரைக்கப்ப்ட வேண்டும்” என வலியுறுத்தினர்.
”இந்த வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தவில்லை, அதனால் தமிழர்களுக்கு நீதியை வழங்கவில்லை” எனக் கனேடிய தமிழர்களின் தேசிய கவுன்சில் சார்பில் பேசிய சட்டத்தரணி அனுஷ்யன் அருள்சோதி அந்த முக்கிய குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.
வரைபு தீர்மானம்
இந்த வரைபு தீர்மானம் சர்வதேச தலையீட்டை பரிந்துரைக்கவில்லை மற்றும் சர்வதேச பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும்.
அதே வேளையில், அது அவர்கள் மீது சுமத்தப்பட வேண்டும் என்று லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். “போர் முடிந்து 15 ஆண்டுகள் முடிந்த பிறகும், போராட்டத்தில் ஈடுபட்ட 250 பெற்றோர்கள் உயிரிழந்த பிறகும், எமக்கு நீதி வழங்கப்படவில்லை. சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்கும்படி இலங்கை அரசின் மீது அழுத்தம் அளிக்கப்பட வேண்டும்”.
சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளின் தூதர்கள் வடக்கு மாகாணத்திற்கான விரிவான பயணத்திற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் பேசும் போது, சர்வதேச பொறிமுறை ஒன்றை ஆதரிப்பதாக கூறியதாக அந்த ஆறு உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய குழுவிடம் அவர் மேலும் தெரிவித்தார்.
“முள்ளிவாய்க்காலில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் அந்த தூதுவர்கள் பேசினார்கள். எமது பங்களிப்பு அல்லது உடன்பாடு இல்லாமல் எதையும் எங்கள் மீது திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார்கள். எனவே, இந்த தருணத்தில், எந்தவிதமான உள்நாட்டு பொறிமுறைகளையும் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். உங்களையும் அப்படியான பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று கோருகிறோம்”.
பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வியா செல்லத்துரை, அந்த ஆறு நாடுகளின் குழு நம்பத்தகுந்த வகையில் போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது கனேடிய மற்றும் அமெரிக்க அரசுகள் முன்னெடுத்துள்ளது போன்று இலக்கு வைத்த பன்னாட்டுத் தடைகளை பரிந்துரைக்க வேண்டும் எனக் கோரினார்.
முக்கிய குழு பரிந்துரை
”இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்த முக்கிய குழு பரிந்துரைக்க வேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.”
இந்த விவாதத்தின் போது பிரசன்னமாகியிருந்த இலங்கை அரசின் பிரதிநிதி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, ஜெனீவாவிலுள்ள ஐ நா அலுவலகங்களுக்கான தமது நிரந்தர பிரதிநிதி தெரிவித்தது போன்று, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையில் வெளி தலையீடு தேவை என்பதை முற்றாக நிராகரித்தார்.
”அப்படியான பொறிமுறையை உள்ளக ரீதியாகவே முன்னெடுத்துச் செல்லும் திறமையும், சட்டங்களும் இலங்கையில் உள்ளன”.
இந்த வரைபு தீர்மானத்தின் மீது தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழர்கள், அந்த முக்கிய குழு உறுப்பினர்களிடம், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் தமிழர்களின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அறிக்கை ஒன்றை அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இறுதி கட்டத்தை நெருங்கும் வாக்களிப்பு நடவடிக்கை! தேர்தல் வெற்றியின் பின்னரான செயற்பாடு குறித்து அறிவுறுத்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |