ஐ. நா பொதுச்செயலாளர் விடுத்த அவசர வேண்டுகோள்
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையான ‘உன்வா’ (UNRWA) கடுமையான நிதிப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், உலக நாடுகள் உடனடியாக 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என ஐ. நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பெரும் நிதி நெருக்கடி காரணமாக இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை
இது தொடர்பாக நடைபெற்ற கொடையாளர்கள் மாநாட்டில் பேசிய குட்டேரஸ், காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 26 இலட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு இந்த முகமை கல்வி, மருத்துவம், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவில் நிலவும் கொடூரமான சூழ்நிலைகள், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த அமைப்பின் சேவைகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இஸ்ரேல் முன்வைத்த சில முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அமைப்பிற்கு அதிக நிதி வழங்கி வந்த அமெரிக்கா தனது நிதியுதவியை நிறுத்தியுள்ளது.

எனினும், ஐநாவின் விசாரணையில் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை இந்த ஐ. நா முகமைகளைச் சேர்ந்த 390 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட குட்டேரஸ், இந்த அமைப்பை முடக்க திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு பிரச்சாரங்களையும், அரசியல் ரீதியிலான தடைகளையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
துருக்கியின் ஐநா தூதுவர் அகமத் யில்டிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று சாடியுள்ளனர்.