போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வவுனியா: உலுக்குளம் பொலிஸார் விசேட பயிற்சி
வவுனியாவில் பாடசாலை நேரத்தில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு உலுக்குளம் பொலிஸாரால் விசேட பயிற்சி வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் அமைந்துள்ள அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கே குறித்த பயிற்சி திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பயிற்சி
குறித்த பாடசாலை முன்பாக காலை மற்றும் பாடசாலை நிறைவடையும் நேரம் என்பவற்றில் பொலிசாருடன் இணைந்து போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு கடமையில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு பயிற்சி பொலிஸாரால் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் வீதிப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் போது அணிவதற்கான சீருடைகளும் இதன்போது பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் ஏ.கே.உபைத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிசார், பாடசாலையின் ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |