லண்டன் செல்லவிருந்த இலங்கையின் UL-503 விமானத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL 503 விமானத்தின் எஞ்சின் இறக்கைகள் பறவை மோதியதில் சேதமடைந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த விமான நிலைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
டேக்-ஆஃப்
கடல் கழுகு (Sea Eagle) என அடையாளங்காணப்பட்ட பறவை ஒன்று விமானத்தின் எஞ்சினில் மோதியதால், விமானிகள் விமானத்தை டேக்-ஆஃப் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டியதாயிற்று.

இதில் எஞ்சினின் சில இறக்கைகள் சேதமடைந்துள்ளதாகவும், கணிசமான தொகையைச் செலவிட்டு அவற்றை பழுதுபார்க்க முடியும் என்றும், இதற்கான இழப்பீட்டுத் தொகையை காப்பீடு (Insurance) மூலம் பெற முடியும் என்றும் உயர் விமானப் போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான நிலையங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்துகளை மேலாண்மை செய்வதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சில காலத்திற்கு முன்னர் குழு ஒன்றை நியமித்திருந்ததாகவும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அக்குழு இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.