டிரான் அலஸின் யுக்திய செயற்திட்டம்: சாடுகிறார் அம்பிகா சற்குணநாதன்
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் யுக்திய செயற்திட்டத்தின் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் தேடல்களை நடத்துகிறதாக என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த யுக்திய செயற்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும் பொலிஸாரின் தந்திரோபாயங்களை அம்பிகா சற்குணநாதன் விமர்சித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸார் கூறுவதில் சில உண்மைகள் இருந்தாலும், அதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று வறுமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை மோசமாகியுள்ளது. அத்தகையவர்களே போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர் அல்லது விற்பனை செய்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலானவர்கள் அதிலிருந்து அதிக பணம் சம்பாதிக்கவில்லை, என்றபோதிலும் போதைப்பொருள் அத்துமீறல்கள், வன்முறை மற்றும் சிறைவாசம் ஆகியவற்றின் சுழற்சியில் சிக்கியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
பொருளாதார நெருக்கடியின் காரணமாக, போதைப்பொருள் விற்பனை போன்ற வேலைகளுக்கு சிலர் தள்ளப்பட்டிருக்கலாம். எனவே ஏழைகளை இந்த விடயத்தில் குறிவைப்பது இந்த சிக்கலை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவப்போவதில்லை ஏனெனில் இது வறுமையின் குற்றமாகும்.
இந்த நிலையில் பலரை இந்தச் செயலில் ஈடுபடத் தூண்டும் வறுமையைப் பற்றி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, பொதுமக்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் மற்றும் உரிய செயல்முறையை கடைபிடிக்காத தேடல்களை நடத்துகிறது என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ள போதிலும், தீர்ப்பு வழங்கப்படாமைப் போன்று அரசாங்கம் செயற்படுவது நாட்டின் உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் கடல் கடந்த சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படும் அமைச்சர் அலஸ், அவை குறித்து விளக்கம் கூட அளிக்கவில்லை என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |