புனித தந்த தாது வைக்கப்பட்டுள்ள விகாரைக்கு சென்ற உக்ரைன் சுற்றுலா பயணிகள்! தேரர் போராட்டம்
இலங்கைக்கு வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் குழு கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித தந்த தாது விகாரைக்கு இன்று விஜயம் செய்தது.
கடுமையான சோதனைக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகளின் குழு ஆலயத்தின் சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குறித்த ஆலயத்திற்கு வருகை தரும் உள்ளூர் பக்தர்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு தனி இடத்திலிருந்து ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூர் பக்தர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்து லெவெல் தம்மாலங்கார தேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தேரர் கருத்து வெளியிடுகையில்,
“கொரோனா தொற்று காரணமாக உக்ரைன் தற்போது நாடு தழுவிய அளவில் முடக்கப்பட்டுள்ளது,
தற்போது அந்நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து அரசாங்கம் மகிழ்வித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நபர்களிடம் தனிமைப்படுத்தப்பட்ட உடைகள் எதுவும் இல்லை.இதைச் சுற்றி நம் நாட்டில் அப்பாவி மக்கள் உள்ளனர். தொற்று நோய் கண்டறிந்தால் யார் பொறுப்பு?
வாகனங்களில் ஓட்டுநர்களைப் பாருங்கள். அவர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருப்பதாக சொன்னார்கள், ஆனால் எதுவும் இல்லை. அரசாங்கம் பொது மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.