ரஷ்யப் படைகளால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான உக்ரேனியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான கைதிகள் சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று குற்றச்சாட்டியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாகப் போரிட்டு வருகிறது.
போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா மீது புதிய குற்றச்சாட்டை உக்ரைன் வைத்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தல்கள்
இங்கு ரஷ்யாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியுள்ளது. அந்த அறிக்கை இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமைச் சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றியுள்ளார்.
இதில் கைதிகளை ரஷ்யா உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது.
துன்புறுத்தல்கள்
சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷ்யாவைச் சேர்ந்த 220 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷ்யர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.
கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதைப் பிற கைதிகளைப் பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களைக் கையாண்டனர்.
மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரைப் பாய்ச்சும் "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்.
கைது உத்தரவு
இக்குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.
இந்த நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் இராணுவத்தைச் சேர்ந்தவர்களைத் தவிரத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்விப் பணியில் உள்ளவர்களும் அடங்குவர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷ்யா மறுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |