உலக சமாதானத்தை சீர்குலைக்கும் உக்ரைன் ரஷ்யா யுத்தம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் உலகம் எதிர்நோக்கும் மாபெரும் வரலாற்று நெருக்கடியாகக் கருதப்படுகின்ற உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம், கடந்த 2022.02.24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இன்றுவரையான பதினாறு மாதங்களில், பல்வேறு பேரழிவுகளையும், பெருமளவிலான உயிர் உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள சமநேரத்தில், அனைத்து உலக நாடுகளினதும் அரசியல், பொருளாதார கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உலக ஒழுங்கையே ஆட்டம் காணச் செய்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிகழ்ந்தேறிய உள்நாட்டுப் போரினால், சர்வதேச வரலாற்றில் எங்கும் பார்த்திருக்கவோ, பதிந்திருக்கவோ முடியாத ஆகப்பெரும் அவலங்களை எதிர்கொண்ட ஓர் இனமாக, இழப்பின் வலிசுமந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்காக நாம் பரிதாபப்படுகிறோம்.
சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்தலும், நாடற்ற மனிதர்களாக ஏதிலிகளாக்கப்படுவதும் எத்தனை கொடியது என்பதை, அனுபவ ரீதியாகக் கண்டுகொண்ட தமிழர்களாகிய நாம், தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பேரவலமொன்றின் விளிம்புநிலையில் நின்று, ஏதிலிகளாக அந்தரிக்கும் உக்ரைனியர்களுக்கு, இதேநிலை தொடரக் கூடாது என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறோம்.
பல்கலைக்கழக தாக்குதல்
இதுவரை 6.5இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், 4.2 மில்லியன் மக்கள் போலந்து, ருமேனியா, மோல்டோவா, ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகப் புகலிடம் கோரி தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் அறிக்கையிட்டுள்ளது.
ஆக 100 இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் இந்தப் போரின் விளைவாக தமது பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஏதிலிகளாக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் குழந்தைகள் என்பது ஆகப்பெரும் கவலைதரும் விடயம். அதேவேளை 55 இலட்சம் உக்ரைனியக் குழந்தைகளின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனிலுள்ள பாடசாலைகளில் ஒருநாளைக்கு சராசரியாக 22 பாடசாலைகள் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகவும் SAVE THE CHILDREN அமைப்பு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.
அதற்கு மேலதிகமாக உக்ரைனின் டொனெக்ஸ் பிராந்தியத்தின் பக்வூத் நகரிலுள்ள சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகம் ரஷ்யப்படைகளின் வான்வழித் தாக்குதலில் முற்றாக அழிவடைந்துள்ளதாக செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு
இவற்றுக்கு மேலாக இருதரப்பு இராணுவத்தினர், அப்பாவிப் பொதுமக்கள் அதிலும்
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடுமற்று
கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
தொழிற்சாலைகள், இரும்பு உருக்கு ஆலைகள் என பொருளாதார கட்டமைப்புக்கள் அனைத்தும் அடியோடு சிதைக்கப்பட்டுள்ளன. கல்விக் கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தைப்படுத்தலுக்கான எரிவாயு உற்பத்தியிலும் கோதுமை உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கும் ரஷ்ய, உக்ரைன் நாடுகளில் மூண்டிருக்கும் இப்போரின் விளைவென்வது, பலநாடுகளில் எரிவாயு விலையேற்றம், தட்டுப்பாடு, கோதுமைத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள பட்டினி நிலைமை என்பவற்றுக்கும் தோற்றுவாயாக அமைந்திருக்கிறது.
ஆயுத தளபாடங்களின் உற்பத்தி வீதத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு, உலக அரசியல் ஒழுங்கையும் சமநிலையையும் தளம்பலுக்குட்படுத்தும் போக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தம் பற்றிய பொதுமைப்பாடான பேச்சுக்கள் எழுகின்ற போதெல்லாம், ரஷ்யாவின் பக்கம் நியாயமிருக்கின்றது என்று ஒருசாராரும், உக்ரைனின் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று ஒருசாராரும், தத்தமது கருத்தியல்களைத் தெரிவிப்பதற்கான பேசுபொருளாகத்தான் இந்த யுத்தத்தைக் கருதுகின்றனர்.
செஞ்சோலைப் படுகொலை
ஆனால் ஒரு கொடிய யுத்தத்திற்குள் நின்று, அந்த யுத்தக் கொடுமைகளின் அத்தனை பக்கங்களையும் அணுவணுவாக அனுபவித்தவன் என்கின்ற வகையில், என்னால் இந்தப் போரையும் அதன் விளைவுகளையும் இலகுவானதாகக் கருதமுடியவில்லை.
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின்போது, உக்ரைன் இலங்கை அரசுக்கு தனது பரிபூரண ஆதரவை வழங்கியிருந்தது. குறிப்பாக 61 மாணவிகளின் உயிரைக் குடித்த, செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட பல விமானத் தாக்குதல்களின் போது, அத்தகையை குண்டுவீசும் விமானங்களை உக்ரைனியர்களே செலுத்தியிருந்தனர்.
இறுதிப்போரின் இறுதி நாட்களில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களை நோக்கி, தமது உயிரைக் காக்கும் ஒரே எண்ணத்தோடு எமது மக்கள் திரண்டிருந்தபோது, அவ்விடங்களில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களிலும் உக்ரைனியர்களில் நேரடிப் பங்கிருந்தது.
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் காட்சிகளை தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் காணொளிகளாகப் பார்க்கின்றபோது, உக்ரைனில் வீசக்கூடியதான இரத்த வாடையை இங்கிருந்தபடியே என்னால் நுகர்ந்து உணர முடிகின்றது.
அந்தக் குண்டுச் சத்தங்களின் நடுவே பல ஆயிரம் குழந்தைகளின், பெண்களின், முதியவர்களின் அலறல்களையும், கைகளை இழந்த, கால்களை இழந்த, பிய்க்கப்பட்ட சதைகளின் காட்சியையும் எனது மனக்கண்களால் காணமுடிகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பு
30 வருட யுத்தத்தின் எச்சங்களுக்குள் வாழ்ந்துவருகின்ற ஒரு இனத்தின் பிரதிநிதியாக அந்த அவலத்தை, மனித உயிர்கள் அங்கு எப்படியெப்படியெல்லாம் பரிதவித்துக்கொண்டிருக்கும் என்ற வேதனையை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது.
இந்த உயரிய சபையும் அதனை உணரவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட. நாங்கள் ஒரே நடாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்று, இந்த உயர்ந்த சபையில் அடிக்கடி கூறிவருகின்ற சகோதர இன நண்பர்கள், ஒரு யுத்தத்தின் கொடுமை எப்படி இருக்கும் என்ற எனது உணர்வை, ஒரு தமிழனின் உணர்வாக மாத்திரம் பார்க்காமல், ஒரு சக மனிதனின் உணர்வாகப் பார்க்கவேண்டும் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு எத்தனை கொடுமையானதாக இருக்கும் என்பதை, சமநேரத்தில் இருவேறு இராணுவ ஆக்கிரமிப்புகளின் கொடுமைகளை அனுபவித்த ஒரு சமூகக்கூட்டத்தின் பிரதிநிதியாக நான் இங்கு பகிர்ந்துகொள்ள விம்புகின்றேன்.
நூற்றுக்கணக்கில்.. ஆயிரக்கணக்கில்.. இலட்சக்கணக்கில் எங்கள் உறவுகள்
துடிக்கத்துடிக்க மரணித்ததை, அவயவங்களை இழந்து மனிதப் பிண்டமாகக் கிடந்ததை,
நேரில் பார்த்த எங்களுக்கு ஒரு யுத்தத்தின் கொடுமை நன்றாகத்
தெரிந்திருக்கவேண்டும்.
இந்த உயர்ந்த சபையில் இருக்கின்ற பலருக்கும் எனக்கு நேர்ந்த அனுபவம் நேர்ந்திருக்கலாம். தென்னிலங்கை உறவுகள் கூட யுத்தத்தின் கொடுமைகளை பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருக்கலாம்.
விமானக் குண்டுவீச்சு
அதனால்தான் யுத்தம் என்பது எங்கு நடந்தாலும்... யார் யாருக்கு இடையே நடந்தாலும்.. அந்த யுத்தத்தையும் அது விளைவிக்கும் மனிதப் பேரவலங்களையும் உணரத் தலைப்படுங்கள் என்று நான் இந்த உயரிய சபையைக் கேட்டு நிற்கின்றேன்.
அந்த யுத்தத்தின் சொல்லப்படாத பக்கங்களை, காட்டப்படாத கொடுமைகளை கொஞ்சமேனும் உணர்ந்து பாருங்கள்.
மற்றொரு யுத்தம் இந்த நாட்டில் நடைபெற வேண்டும் என்று, பல அன்னிய சக்திகள் தமது சுயலாபம் கருதிய சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடிமகனும்- அது தமிழராக இருந்தாலும் சரி.. சிங்களவராக இருந்தாலும் சரி.. முஸ்லிம்களாக இருந்தாலும் சரி- ஒரு யுத்ததின் கொடுமையை, ஒரு யுத்தம் மானிடப்பிறப்புக்கு விளைவிக்கும் அநீதியை நாம் உணர்ந்து பார்க்கவேண்டும்.
2008ம் ஆண்டு கிளிநொச்சியில் கடுமையான சண்டைகள் நடைபெற்றபோது நான் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அக்காலப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்களாலும், விமானக் குண்டுவீச்சுகளாலும் கொத்துக்கொத்தாக எமது மக்களும், மாணவர்களும் கொன்றழிக்கப்பட்டதை எனது கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
உக்ரைன் யுத்தத்தின் விளைவுகள்
ஆனால் அந்தச் சம்பவங்கள் இலங்கையின் ஊடகங்களில் வேறு விதமாகவும், பிழையான தரவுகளாகவுமே வெளிவந்திருந்தன. யுத்தகளத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற எந்தச் செய்தியுமே முழுமையான உண்மையை வெளிப்படுத்துவது கிடையாது.
அதுபோலவே ரஷ்ய-உக்ரைன் களமுனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் உயிர், உடைமை இழப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களும் முற்றிலும் உண்மை என்றில்லை.
யுத்தத்தின் வெற்றியை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்ற, உளவியல் நடவடிக்கைளின் திட்டமிட்ட பரப்புரைகளாகவே அனேகமான செய்திகள் அமைகின்றன.
ஒரு யுத்தத்தை அனுபவித்த நாடு என்கின்ற ரீதியில் உக்ரைன் யுத்தத்தின் விளைவுகள் பற்றித்தான் நாம் யோசித்தாக வேண்டும். அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு என்னவிலையைக் கொடுக்கவும் பலரும் காத்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், அந்த யுத்;தத்தை நிறுத்துவதற்கு குறைந்தது எமது கண்ணீரையாவது நாம் கொடுக்க முன்வரவேண்டும்.
ஈழத்தமிழர்களின் காயங்கள்
ஒரு கொடிய யுத்தத்தில் பெற்றோரை இழந்த ஒரு பிள்ளையின் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்று, இப்பொழுதும் நான் நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
யுத்தத்தின் கொடுமைகளுக்குள் அகப்பட்டு உளவியல் பாதிப்புக்கு உள்ளான நூற்றுக்கணக்கான.. ஆயிரக் கணக்கான மனிதர்கள் நடைபிணங்களாக நடமாடித்திரிகின்ற ஒரு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவன் என்கின்ற உணர்வு நிலைகளின் அகவயப்பட்டே இன்று நான் இங்கு உரையாற்றுகிறேன்.
தயவு செய்து உலகில் எங்கு யுத்தம் நடந்தாலும் அந்த யுத்தத்தைத் தடுத்து நிறுத்த எங்களால் முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம்.
இலங்கை சிறிய நாடுதான். அவ்வாறிருக்க வல்லரசுகளின் விளையாட்டைத் தடுக்க ஏதாவது செய்யலாமா என்று யோசிப்பதே பலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம்.
ஆனால் போர் தந்த விளைவுகளின் துயர்சுமந்திருக்கும் ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில், கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை போல, கனேடியப் பிரதமரின் அறிக்கையைப் போல, உக்ரைனின் சமாதானத்துக்காக, உக்ரைனியர்களின் நலவாழ்வுக்காக இந்த மன்றம் குறைந்தது ஒரு பிரேரணையையாவது நிறைவேற்றலாம்.
அங்கு காவுகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் உயிர்களுக்காக சில
நிமிட மௌன அஞ்சலியையாவது நாம் செலுத்தலாம்.
அதையும் தாண்டி இனி ஒரு யுத்தம் இந்த மண்ணில் நடக்கவே கூடாது என்ற ஒரு
பிரகடனத்தைக்கூட நாங்கள் எடுக்க முடியும்.
உக்ரைன் மீது யுத்தத்தை மேற்கொண்டுள்ள ரஷ்யா, தான் அணு வாயுதங்களைப் பாவிக்கப் போவதாக கிட்டத்தட்ட 8 தடவைகளுக்கு மேல் எச்சரித்துவிட்டது. தனது அணுவாயுதங்கள் சிவற்றை அது பெலாரசுக்கு நகர்த்தியும் வைத்துள்ளது.
அணுவாயுதங்கள் நிறைந்துள்ள பூமி
பிரித்தானியா மீது அவற்றைப் பாவித்து
பிரித்தானியாவை முழுவதுமாகவே அழித்துவிடப்போவதாகவும் எச்சரித்து வருகின்றது.
ஒரே குண்டில் பிரித்தானியாவை அழித்துவிடப் போவதாக ரஷ்ய அதிபர் புடின் தன்னிடம்
நேரடியாகவே எச்சரித்ததாக, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
கூறியிருந்தார்.
நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு உலக யுத்தத்தை சந்தித்தேயாகவேண்டிய ஆபத்தை நோக்கி உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் எங்களை இட்டுச் சென்றுகொண்டு இருக்கின்றது. இந்தப் பூமியில் இன்றைக்கு சுமார் 13இ100 அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்தப் பூமிப்பந்தை பல தடவைகள் அழித்துவிடும் அளவுக்கு அணுவாயுதங்கள் நிறைந்துள்ள இன்றைய நிலையில் ஒரு அணுவாயுத யுத்தத்தை நோக்கி உலகம் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இடதுசாரிக் கொள்கையை உலகநாடுகளுக்கே கற்றுக்கொடுத்து, ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்களிடையே இன, மொழி, மத அடிப்படையிலான சமத்துவத்தைப் பேணுவதிலும் சோவியத் ஒன்றியமாக இருந்து ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமான சாம்ராஜ்யமாக நடந்துகொண்ட ரஷ்யா, இறைமையோடு வாழ நினைக்கும் உக்ரைனியர்கள் மீது மேற்கொண்டுள்ள இவ் ஆக்கிரமிப்புப் போரின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இத்தகைய அழிவுகளும், இழப்புக்களும் முடிவற்றுத் தொடர்வது மனிதாபிமானத்திற்கும், சர்வதேச நியமங்களுக்கும் அப்பாற்பட்ட செயல் என்ற அடிப்படையில், ரஷ்யாவால் உக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான கண்டனத் தீர்மானமொன்றை இந்த உயரிய சபையில் நிறைவேற்றுவதன் மூலம், ஒரு நாடாக, யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற ஒரு தேசமாக, உலக சமாதானத்துக்கான அடிப்படையை ஏற்படுத்துவதில் ஒவ்வொரு நாடுகளுக்கும் இருக்கும் வகிபங்கை உறுதிப்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.