உக்ரைன் ரஷ்ய மோதல் இதுவரை நடந்தது என்ன? (Video)
இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ரஷியா - உக்ரைன் இடையே நேற்று முன்தினம் போர் ஏற்பட்டது. ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி சென்று கடும் தாக்குதலை நடத்தின.
முதல் நாள் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை ரஷ்யா குண்டு வீசி தகர்த்தது.
2வது நாளாக நேற்று அதிகாலையிலேயே உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்யா போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதனால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் நேற்று ரஷ்யா வசமானது.
அங்கிருந்து தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டு தலைநகர் கீவ் நோக்கி ரஷ்யா படைகள் நகர்ந்தன.
நேற்று பிற்பகலில் தலைநகர் கீவ் முழுவதையும் ரஷ்யா படைகள் முற்றுகையிட்டன. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தலைநகருக்குள் உக்ரைன் ராணுவம் வர முடியாதபடி ரஷ்யா தடையை ஏற்படுத்தியது.
தலைநகர் கீவ் அருகே உள்ள காஸ்டோமல் விமான தளத்தை நேற்று இரவு ரஷ்யா கைப்பற்றியது.
அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா தரை இறக்கியது. இதனால் உக்ரைன் அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பியது.
3ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் இருந்து தலைநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ரஷ்யா-உக்ரைன் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
கீவ் நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இவான்கீவ் என்ற இடத்தில் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது.
அந்த மோதலில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிர் தேசம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.
கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.
நேற்று இரவு தாக்குதல் அச்சத்தில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இன்று அதிகாலை கீவ் நகரில் உள்ள மற்றொரு விமான தளத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். இந்த சண்டையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை தகர்த்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
80 பீரங்கிகள், 516 வாகனங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 10 ராணுவ விமானங்களை அழித்து இருப்பதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதற்கிடையே தலைநகர் கீவ் முழுவதும் இணைய தள சேவையை ரஷியா வெற்றிகரமாக முடக்கி உள்ளது.
இதனால் தகவல் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் முடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி ரஷ்யா வீரர்கள் தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளனர்.
உக்ரைன் அதிபர் தனது மாளிகையை விட்டு வெளியேறி ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார். அங்கிருந்தபடி ரஷ்ய தாக்குதல் தொடர்பான தகவல்களையும் மற்ற உத்தரவுகளையும் வெளியிட்டவாறு உள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட ஒரு தகவலில், ரஷ்ய படைகள் கீவ் நகருக்குள் நுழைந்து விட்டன. இன்று இரவுக்குள் கீவ் நகரம் முழுவதையும் ரஷ்ய படைகள் ஆக்கிரமிக்கக் கூடும் என்று கூறி உள்ளார்.
இதன் மூலம் தலைநகர் கீவ் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யா வசம் போய் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே ஓரிரு நாட்களில் ரஷ்யா உக்ரைன் போரில் திருப்புமுனை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.