ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கோரிக்கை! - உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்து (Photo)
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையில் கையெழுத்திட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில், உக்ரைனை ஒரு சிறப்பு நடைமுறையின் கீழ் உடனடியாக அங்கத்துவம் பெற அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு நடைமுறை எவ்வாறு இருக்கும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா? என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் உறுப்பு நாடுகளிடையே "வெவ்வேறான கருத்துக்கள்" இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல் இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று 8 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான கோரிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்திட்டதை அடுத்து, உக்ரைன் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.


