அன்று தமிழர்கள் கேட்டதை இன்று செய்து காண்பித்த ரஷ்யா!
ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் உலக அரசியல் ஒழுங்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் 2009இற்குப் பின்னரான சூழலில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து வரும் வடக்குக் கிழக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் சர்வதேச அரசியல் பார்வைகள் இன்றி வெறுமனே கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்கும், சர்வதேச அரசியல் - பொருளாதார அவதானிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ரஷ்யா நடத்திய பொது வாக்கெடுப்பையே வடக்குக் கிழக்கில் தமிழர்களும் அன்று கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு இணங்க மறுத்த இந்தியா, ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளையும் குழப்பியிருந்தது. ஆனால் இன்று இராணுவ ஆக்கிரமிப்புடன் ரசியா நடத்திய வாக்கெடுப்புக்கு ஐ.நா. வெறும் கண்டனம் மாத்திரமே வெளியிட்டுள்ளது. இந்தியாவும் மறைமுகமாக ஆதரவு வழங்கியுள்ளது
இதுவரை காலமும் அரபுநாடுகள், மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகள் மற்றும் ஆசிய நாடுகளில் நடக்கும் உள்ளக மோதல்களை எல்லாம் பார்த்துத் தமது புவிசார் அரசியல் - பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்பக் கதை சொல்லிக் கொண்டும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் போன்றும் தங்களை அடையாளப்படுத்தி வந்த ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் போரினால் மூச்சு விடமுடியாமல் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
அதாவது ரஷ்யா - உக்ரைன் போர் ஐரோப்பிய நாடுகளின் குசினிக்குள் நடக்கும் சண்டை எனலாம். இதனாலேயே போரின் வலியை ஐரோப்பிய நாடுகள் தற்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றன.
இதன் காரணமாகவே இம்முறை ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை விவகாரத்தில் நாட்டம் செலுத்தவில்லை என்பது வெளிப்படை.
உக்ரைனை மோதவிட்டு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றது. இப்போரினால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இழக்கப்படுவது பற்றி அமெரிக்காவுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை விவகாரம் மற்றும் சீனா போன்ற தனது எதிரி நாடுகளையெல்லாம் கையாள்வதற்கு இதுவரை காலமும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பை நாடிய அமெரிக்கா தற்போது, உக்ரைன் போரை ஊக்குவித்துத் தனது அரசியல் - பொருளாதார நலனில் மாத்திரம் அக்கறை செலுத்துகின்றது.
அதுமாத்திரமல்ல அமெரிக்காவின் இந்தச் சர்வதேச அரசியலில் அமெரிக்கா ஜனாதிபதிபதிகள் அல்ல அமெரிக்க அரச இயந்திரமே (State Machine) செயற்படுத்தப்படுகின்றது என்பதைச் சமீபத்திய நகர்வுகளும் காண்பிக்கின்றன.
குறிப்பாக புதன்கிழமை அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு மாதத்திற்கு முன்னர் இயற்கை எய்திய அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதியான ஜாக்கி வோலலோர்ஸ்கி (Jackie Walorski) எங்கே என்றும் அவர் இந்த நிகழ்வுக்கு ஏன் வரவில்லை என்றும் கேட்டிருக்கிறார்.
ஜோ பைடன் மீண்டும் மீண்டும் ஜாக்கி எங்கே என்று கேட்டபோது நிகழ்வில் பங்குபற்றியிருந்த பிரமுகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜாக்கி வோலோஸ்கர் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்துவிட்டார். அது மாத்திரமல்ல ஜோ பைடன் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை அவருடைய மாநிலத்துக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் ஜாக்கி இறந்ததையும் வெள்ளிக்கிழமை அவருடைய மாநிலத்துக்குச் செல்லவிருந்த ஏற்பாடுகளையும் மறந்து ஜோ பைடன் ஜாக்கி எங்கே என்று கேட்டமையானது, ஜோ பைடனுடைய வயது மூப்பையும், ஞாபக மறதியையும் புட்டுபோட்டுக் காட்டியுள்ளன.
ஜோ பைடன் பதவியேற்ற காலம் முதல் இவ்வாறு மாறாட்டமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவே அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆகவே ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் - பொருளாதார நகர்வுகள் எல்லாமே அமெரிக்க அரச இயந்திரத்தாலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது பகிரங்கமாகியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆயுத விற்பனை முகவர்களே செயற்பட்டிருக்கின்றனர். டொனால்ட் ட்ரம் கூட 2016 இல் அவ்வாறுதான் பதவிக்கு வந்தார். பின்னர் அவரைப் பதவி விலக்கி, ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னணியிலும் அமெரிக்க ஆயுத வியாபாரிகளே முன்னின்று செயற்படுகின்றனர் என்பதை ஜோ பைடனின் ஞாபக மறதியும் பின்னர் அதனை மூடி மறைக்கப் புனையப்படும் கதைகளில் இருந்தும் அறிய முடிகின்றது.
ஆகவே அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் பின்னணியிலேதான் ரஷ்யா - உக்ரைன் போர் நடத்தப்படுகின்றது என்பதும் குறிப்பாக உக்ரைன் ஆயுத உதவிகளைக் கூட அமெரிக்கா வழங்குகின்றது என்பது வெளிப்படை.
உக்ரைனுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிக்காக பன்னிரெண்டு பில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டுமென பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சென்ற புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக ஞாபக மறதியுள்ள ஜோ பைடன் அவ்வாறு கோருகின்றார் என்றால், அதன் பின்னணியில் அமெரிக்காவை இயக்கும் அமெரிக்க இயந்திரமே செயற்படுகின்றது என்பதை உணர முடியும். இப்பலவீனங்களை ஏற்கனவே அறிந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களைச் சென்றவாரம் தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
சமீபகாலமாக மாறி வரும் உலக அரசியல் போக்குகளை உற்று ஆராய்ந்தறிந்து செயற்படுத்தும் இளம் தலைமுறையினர் தமிழ்த்தேசிய அரசியல் பரப்புக்குள் கால் பதிக்க வேண்டிய காலமிது
ஜோ பைடன் பதவியேற்ற காலம் முதல் இவ்வாறு மாறாட்டமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவே அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆகவே ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது நடை சமீபகாலமாக மாறி வரும் உலக அரசியல் போக்குகளை உற்று ஆராய்ந்தறிந்து செயற்படுத்தும் இளம் தலைமுறையினர் தமிழ்த்தேசிய அரசியல் பரப்புக்குள் கால் பதிக்க வேண்டிய காலமிது நான்கு பிராந்தியங்களையும் சேர்ந்த மக்களின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களில் அதிகமானோர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துமுள்ளனர். ஆனால் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெறும் பொது வாக்கெடுப்பு ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும் என மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தன. அவ்வாறே ரஷ்யாவும் வாக்கெடுப்பில் வெற்றியீட்டியுள்ளது.
ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் 93 வீதமும் கெர்சன் பிராந்தியத்தில் 87வீதமும் லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களில் முறையே 99 - 98 வீதமும் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.
இதனால் ரஷ்யாவுடன் இணைந்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷிய ஜனாதிபதி புடின் விரைவில் வெளியிடவுள்ளார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவின் தீர்மானத்தைக் கண்டித்துள்ளது.
பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட முறை நியாயமற்றது என்றும், ரசிய இராணுவத்தின் உதவியுடனேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனாலும் ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றின் எதிர்ப்புக்களையும் மீறி உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நான்கு பிராந்தியங்களையும் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ஆகவே உக்ரைன் நாட்டின் குறித்த நான்கு பிராந்தியங்களும் ரஷ்யாவின் இறையாண்மைக்குள் வந்துவிட்டதால், அந்தப் பகுதிக்குள் உக்ரைன் இராணுவமோ அல்லது உக்ரைனுக்கு ஆதரவாகப் போரிடும் வெளிநாட்டு இராணுவங்களோ உட்பிரவேசிக்க முடியாது என்று ரஷ்யா உத்தரவிடக்கூடும். அவ்வாறு ரஷ்யா உத்தரவிடுமாக இருந்தால், சர்வதேசப் போர்ச் சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக்கூடிய ஆபத்துக்களே விஞ்சிக் காணப்படுகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து கடலுக்குள்ளால் ஐரோப்பிய நாடுகளுக்குக் எரியுவாயுவைக் கொண்டு செல்லப்படும் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டமைக்கு ரஷ்யா மீதும் வேறு சக்திகள் மீதும் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
சுவீடன், டென்மார்க் நாடுகளின் ஊடாகச் செல்லும் குழாய்களிலேயே வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது ரஷ்யாவின் சதி வேலையென அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றன. ஆனால் ரஷ்யாவுக்கு இலாபம் தரும் பொருளாதார மையம் ஒன்றை ரஷ்யா ஏன் தாக்க வேண்டுமென ரஷ்ய அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துமுள்ளனர். ஆனால் அமெரிக்காவின் பொக்ஸ் தொலைக்காட்சி ரஷ்யா மீது குற்றம் சுமத்தவில்லை. அப்படிச் செய்வதால் ரஷ்யாவுக்கே நஷ்டம் என்றும், உக்ரைன் போரைப் பயன்படுத்தி வெளிச் சக்திகள் இதனைச் செய்திருக்கலாம் எனவும் பொக்ஸ் தொலைக்காட்சி கூறுகின்றது.
பொக்ஸ் தொலைக்காட்சி அமெரிக்க வெள்ளையினச் சார்பு ஊடகம், முன்னர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடுமையான ஆதரவு கொடுத்துப் பின்னர் கடும் எதிர் விமர்சனங்களையும் மேற்கொண்ட ஒரு தொலைக்காட்சி. தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தையும் பொக்ஸ் தொலைக்காட்சி விமர்சிப்பதுடன், ரஷ்ய உக்ரைன் போரில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.
அதேவேளை, எரிவாயுக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரசியா மீது குற்றம் சுமத்துவதைப் பயன்படுத்தி ஜனாதிபதி புட்டின் ரஷ்ய மக்களிடம் அனுதாபத்தைப் பெற்று மேலும் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
அதாவது அமெரிக்காவை மையமாகக் கொண்ட நேட்டோ படைகள் ரஷ்யா மீது உக்ரைனில் தாக்குதல் நடத்துவதாகக் கூறி புட்டின் ரஷ்ய மக்களிடம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகலாம்.
இப்பின்னணியில் சர்வதேச அரசியல் - பொருளாதார கள நிலைமைகள் புதிய ஒரு சிக்கலாக மாறக்கூடிய ஆபத்துக்கள் உண்டு. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபை, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் இருந்து ஈழத்தமிழர்கள் சர்வதேச நீதியை எதிர்பார்ப்பது கடினமாகத் தெரிகிறது.
உக்ரைன் போரினால் ஐக்கிய நாடுகள் சபைகூடச் செயலிழந்து வருகின்றன. இப்போரினால் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் உணவுப் பற்றாக்குறை மந்தபோசனைப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் உலக உணவு ஸ்தாபனம் கூறுகின்றது.
இந்த உலக உணவு ஸ்தாபனம் சில வருடங்களாக ஐ.நாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகித் தனியாகவே இயங்கி வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போரினால் ஐ.நா உள்ளிட்ட உலக அரசியல் பொறிமுறைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணத்தினால் பொதுவாக்கெடுப்பு நடத்திய புட்டின், ரஷ்யாவின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தக்கூடும். எனவே எண்ணெய் வளங்களை எந்த நாடு கூடுதலாகப் பெருக்கி வைத்திருக்கின்றதோ, அந்த நாடுதான் உலக அரசியலில் தாக்கத்தைச் செலுத்தும் நிலைமை உருவாகி வருகின்றது.
இச்சூழலில் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் என்பது ஆயிரத்தில் ஒரு பிரச்சினையாகச் சுருங்கி வருகின்றது எனலாம்.
சமீபத்திய உலக அரசியல் ஒழுங்குச் சிக்கல்களினால் சிங்கள ஆட்சியாளர்களுடன் மாத்திரமே அமெரிக்கா போன்ற மேற்குலகமும், ஐரோப்பிய மற்றும் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றன. 2009 இற்குப் பின்னரான சூழலில் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியாவை மாத்திரம் நம்புகின்றமையே அதற்குக் காரணம்
2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மென்போக்காக மாறுவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் காரணமாகியது. அதன் பின்னரான சூழலிலும் கூட எந்தவொரு தமிழ்த்தேசியக் கட்சியும் சர்வதேச அரசியல் பார்வைகள் இன்றித் தனியே தேர்தல் அரசியலோடு மாத்திரம் ஒதுங்கிக் கொண்டன.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டுமென்ற அரசியல் நோக்கம் 2009 இற்குப் பின்னரான சூழலில் நேர்மையாக இருந்திருந்தால், 2015 இல் ஆதரவு கொடுக்காமல் ஜெனீவாவில் இன அழிப்பு விசாரணை என்பதை ஒருமித்த குரலில் கோரியிருக்கலாம்.
அதன் ஊடாகச் சுயநிர்ணய உரிமைக்கான அடித்தளத்தை மேலெழச் செய்திருக்கலாம். ஆகவே தீர்க்க தரிசனமின்றிக் காலத்தைத் தவறவிட்ட பின்னணியில் தற்போது உலக அரசியல் ஒழுங்கும் மாறி வருகின்றது.
இதனால் ஈழத்தமிழர் விவகாரம் மேலும் பின்னடைவையே சந்திக்கும் ஆபத்துகள் உண்டு. சமீபத்திய உலக அரசியல் ஒழுங்குச் சிக்கல்களினால் சிங்கள ஆட்சியாளர்களுடன் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய மற்றும் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றன.
2009 இற்குப் பின்னரான சூழலில் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியாவை மாத்திரம் நம்பியிருந்ததால் இந்த அவலம் ஏற்பட்டது எனலாம். இந்தியா என்ற பிராந்திய எண்ணப்பாட்டை மாத்திரம் உள்வாங்கி மறைமுகமாகக் காய் நகர்த்தியமையும் அதற்குக் காரணம். ரஷ்யா நடத்திய பொது வாக்கெடுப்பையே வடக்குக் கிழக்கில் ஈழத் தமிழர்களும் அன்று கேட்டிருந்தார்கள்.
ஆனால் அதற்கு இணங்க மறுத்த இந்தியா, ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளையும் அப்போது குழப்பியிருந்தது. அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாகவும் மாறியது. ஆனால் இன்று இராணுவ ஆக்கிரமிப்புடன் ரஷ்யா நடத்திய வாக்கெடுப்புக்கு ஐ.நா. வெறும் கண்டனங்களை மாத்திரமே வெளியிட்டிருக்கின்றது.
இந்தியா ரஷ்யாவின் அந்த முடிவுக்கு மறைமுகமாக ஆதரவும் வழங்கியுள்ளது. (ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம்) சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகப் பிரதேசம் என்பதற்கான அங்கீகாரத்துக்கு மாத்திரமே அன்று பொது வாக்கெடுப்பைத் தமிழர்கள் கோரியிருந்தனர். ஆனால் அதனைத் தடுப்பதற்கு அன்று காரண காரியமற்ற சட்ட வியாக்கியானங்கள் செய்யப்பட்டிருந்தன.
ஆகவே இந்தியாவுடன் மாத்திரம் பேசுகின்ற பிராந்திய மட்டத்திலான அரசியல் நகர்வுகள் மட்டும் போதுமானதல்ல என்பதைச் சில தமிழ்த்தேசியக் கட்சித் தலைமைகள் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும்.
உலக அரசியல் ஒழுங்கு முறைகளிலும் உரிய பார்வை தமிழ்த் தரப்புக்கு அவசியமானது.
இப் பின்புலத்திலேதான் சமீபகாலமாக மாறி வரும் உலக அரசியல் போக்குகளை உற்று ஆராய்ந்தறிந்து செயற்படுத்தும் இளம் தலைமுறையினர் தமிழ்த்தேசிய அரசியல் பரப்புக்குள் கால் பதிக்க வேண்டிய காலமிது.