ரஷ்யாவை சிதைப்பதா...! குரோஷியா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்ய போர் 341 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் போரில் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் என்று குரோஷிய அதிபர் ஷொரன் மிலனொவிக் தெரிவித்துள்ளார்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
குரோஷியா அதிபர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் உறுப்பினரும், ஐரோப்பிய நாடுமான குரோஷியாவின் அதிபர் ஷொரன் மிலனொவிக் இன்று செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அதிநவீன இராணுவ டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதினை நான் எதிர்க்கின்றேன்.போரில் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம். உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நான் எதிர்க்கின்றேன்.
மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவது போரை நீட்டிக்கும்.இதன் நோக்கம் என்ன? ரஷ்யாவை சிதைப்பதா? ரஷ்யாவில் அரசை மாற்றுவதா? ரஷ்யாவை துண்டாக்குவதா?இது முட்டாள்தனமானது' என்றும் தெரிவித்துள்ளார்.