உக்ரைன் தலைநகரில் அடுத்தடுத்து வெடித்து சிதறும் ஏவுகணை தாக்குதல்! பலர் உயிரிழந்திருக்கலாமென தகவல்
உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன்,குறைந்தபட்சம் சுமார் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
உக்ரைன் - ரஷ்ய போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவையும் - கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தில் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
தொடரும் ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில், இதற்கு பதிலடியாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கீவ், தெர்னொபில், ஹெம்லின்ஸ்கி, ஜுயொடொமிய்ர், ரொய்வென்யுஸ்கி உட்பட பல நகரங்கள் மீது ரஷ்யா இன்று ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணை தாக்குதல் தற்போதும் நீடித்து வரும் நிலையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், இந்த ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 229 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.