உக்ரைனில் மீண்டும் அதிகரிக்கும் போர் பதற்றம்! இரவோடு இரவாக தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா
அமெரிக்க அதிபரின் உக்ரைன் விஜயத்தின் பின்னர் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைனின் உட்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.
தொடர் ஏவுகணை தாக்குதல்
மேலும் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்ததாகவும் அவசரகால சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கீவ் மேயர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஸ்சியா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளதாகவும், மின்பகிர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் லிவிவ் பிராந்தியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டினிப்ரோபெட்ரோவ்ஸ் பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.