நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டில் போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உறுதி ஏற்றுள்ளார்.
போர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பா சந்திக்கும் மிகப்பெரிய போர்
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட காணொளி பதிவில் இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரோப்பா சந்திக்கும் மிகப்பெரிய போரை மிக பொறுமையாகவும், திறம்படவும் எதிர்கொண்ட உக்ரைன் மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனாலும், ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ந்து போரிட வேண்டும் என்பதை மட்டும் நன்கு உணர்ந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நம் வாழ்வின் மிக நீண்ட மற்றும் கடுமையான நாட்களில் நம் கண்கள் இன்னும் துயில் கொள்ளவில்லை. இந்த 2023 ஆம் ஆண்டில், போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.