உலகெங்கும் குழப்பங்களை விதைத்துள்ள மேற்கத்திய நாடுகள் - புடின் உறுதி
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் போரில் ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லாதது என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றுகையில் கூறியதாவது,
போரை தவிர்க்க ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவை பெற்ற உக்ரைன், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா நகரை தாக்க முயற்சி செய்தது.
சர்வதேச மோதல்
உலகெங்கும் பல பகுதிகளில் குழப்பங்களையும் மோதலையும் மற்றும் போரையும் மேற்கத்திய நாடுகள் விதைத்துள்ளன. கீவ் ஆட்சியாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளால், உக்ரைன் மக்கள் பணைய கைதிகளாக மாறி உள்ளனர். அவர்கள் உக்ரைனை, அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமித்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையை சர்வதேச மோதலாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. இதனை நாங்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சமூகத்தை பிளவுபடுத்தும் மேற்கத்திய முயற்சிகளுக்கு ரஷ்யா ஒரு போதும் அடிபணியாது. பெரும்பான்மையான ரஷ்யர்கள் போரை ஆதரிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.