பிரித்தானியாவின் மனித உரிமை நிலைப்பாடு! யுத்தக் குற்றவாளிகளை பாதுகாக்கும் அநுர அரசு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின்(Vijitha Herath) அண்மைய கருத்தானது தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்கின்றார்களா என்று சந்தேகிக்க வைக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்றையதினம்(27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"இராணுவ படையினை சேர்ந்தவர்கள் மூவர் மற்றும் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய அரசு பயண தடையினை விதித்திருக்கின்றது.
அந்த வகையில் பார்க்கின்ற போது யுத்தம் முடிவுற்று 16 வருடங்களுக்குப் பின்னர் பிரித்தானிய அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதன் அடிப்படையில் இந்த தடையை விதித்து இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நான்காயிரம் நாட்களுக்கு மேல் அதிகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களுடைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மனித உரிமை பேரவலம் இடம்பெற்றிருக்கின்றது.
மனித உரிமை மீறப்பட்டு இருக்கின்றது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்த அடிப்படையில் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இவற்றையும் கண்டுகொள்ளாத நிலையில் பிரத்தானிய அரசு இந்த நால்வருக்கு எதிராக தடையினை ஏற்படுத்தி இருக்கின்றது என்ற விடயம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பார்க்கின்ற போது அவர்கள் இந்த விடயத்தை வரவேற்கும் நிலையில் காணப்படுகின்றார்கள்.
காலம் கடந்தாவது இவ்வாறானதொரு ஒலிக்கீற்று கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
