உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது - பிரித்தானியா தகவல்
ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைனுடைய இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் மேலும் 1.5 பில்லியன் யூரோக்களை அளிக்கவிருப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதில் வெற்றியடைவது கடினம் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடுருவல் தள்ளாடத் துவங்கிவிட்டது என்று பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் தெரிவித்துள்ளார்.
26 நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் இராணுவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யா போரில் தோற்கத் துவங்கிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
சண்டையும் உயிரிழப்புக்களும் தொடர்வது உண்மைதான் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று கூறியுள்ள பென் வாலேஸ், ஆனாலும் ரஷ்யா பல பகுதிகளில் தோற்கத்துவங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா துவங்கிய உக்ரைன் ஊடுருவல், பல முறை மாற்றம் செய்யப்பட்டு, இப்போது வெறும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை மட்டும் குறிவைக்கும் அளவில் வந்து நிற்கிறது என்கிறார் பென் வாலேஸ்.
உக்ரைன் வெற்றிபெற உதவுவதற்காகவும், உக்ரைன் அதன் இறையாண்மைக்காக நிற்க உதவுவதற்காகவும், உக்ரைனில் ஜனாதிபதி புடினின் லட்சியங்கள் தோல்வியடைவதை உறுதிசெய்வது, உறுதியளிக்கப்பட்டவை" என்று அவர் மேலும் கூறினார்.