பின்னடைவை சந்திக்கின்றாரா ரிஷி சுனக்! எழுந்துள்ள சர்ச்சை
பிரித்தானிய நாட்டின் புதிய பிரமதர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே எதிர்கட்சியினரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
ரிஷி சுனக் பிரித்தானிய மக்களால் பிரதமராக தெரிவு செய்யப்படவில்லை, தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலான வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.
தேர்தல் நடத்த வேண்டும்
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, பிரித்தானிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நவம்பர் 17ம் திகதி வரை ஒத்தி வைக்கப்படும் என்ற ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய மக்கள் கடந்த 7 வாரத்தில் 3 பிரதமர்களைப் பார்த்துள்ளனர், உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத வகையில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்திருப்பது பிரித்தானிய மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிரித்தானியா தற்போது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தனது அரசு சில "மிகக் கடினமான முடிவுகளை" எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
அதேவேளையில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போது கருணையுடன் செயல்படுவேன் என்று பிரித்தானிய மக்களுக்கு உறுதியளித்து உள்ளார்.
வரவு செலவு திட்டம் ஒத்திவைப்பு
இந்நிலையில், ரிஷி சுனக் தலைமையிலான இங்கிலாந்து அரசு அதன் வரவு செலவு திட்டத்தை வெளியிடுவதை இரண்டு வாரங்களுக்கும் ஒத்திவைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்து கடினமான தேர்வுகளைச் செய்யக் கூடுதலான நேரம் தேவை என்பதால் சுனக் வரவு செலவு தாக்கலை ஒத்திவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரமதர் ரிஷி சுனக் தமிழ் பெண் சுயெல்லா பிரேவர்மேன்னை அமைச்சராக்கிய விவகாரத்திலும் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் ரிஷி
இதற்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், "பாதுகாப்பு விதிமீறலால் பதவியை இராஜினாமா செய்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்துள்ளது சரியா? சிறப்பான ஆட்சியைத் தருவேன் என்று கூறிய பிரதமராகப் பொறுப்பேற்றவர் இராஜினாமா செய்தவரை மீண்டும் அமைச்சராக்கியது தவறு. எந்தவொரு தவறுகளையும் செய்தவரைத் தான் இந்த பதவியில் நியமிக்க வேண்டும். பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ரிஷி சுனக் தேச பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளார்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பதில்
இதற்குப் பதிலளித்த ரிஷி சுனக், "அவர் தெரியாமல் ஒரு தவறு செய்துவிட்டார். இருப்பினும், அதற்கு முழு பொறுப்பு ஏற்று உடனடியாக பதவியும் விலகிவிட்டார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில் எந்தவொரு தவறும் இல்லை. குற்றவாளிகளை ஒடுக்குவதிலும் நமது நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதிலும் சுயெல்லா பிராவர்மேன் கவனம் செலுத்துவார். நீங்கள் (தொழிலாளர்) எப்போதும் குற்றவாளிகளை ஒடுக்கத் தவறுவதை மறந்துவிட வேண்டாம்" என்றார்.