பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
பிரித்தானியாவில் மேலும் 40 கோவிட் மரணங்கள் மற்றும் 2,678 புதிய கோவிட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது நேற்று பதிவான 18 மரணங்கள் மற்றும் 2,729 கோவிட் வழக்குகளுடன் ஒப்பிடும் போது சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,401,109 ஆக உயர்ந்துள்ளதாகவும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 127,385 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் தற்போது 33,388,637 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 11.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தடுப்பூசி செலுத்துவதை மக்களிடையே தீவிரப்படுத்தியதன் காரணமாக பிரித்தானியாவில் 65 வீதம் கோவிட் தொற்று குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், “கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட அனைத்து வயதினருக்கும் கோவிட் தொற்று பரவுவது குறைந்துள்ளது.
தடுப்பூசி காரணமாக பிரித்தானியாவில் 65 வீத நோய்த்தொற்று குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை 48 வீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக 5,000 க்கும் குறைவானவர்களே நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. உலக அளவில் கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் பிரித்தானியா, அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை பெற்றுள்ளன.