பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரங்கள்
பிரித்தானியாவில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கோவிட் - 19 பரவல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,064 பேருக்கு நோய் தொற்று பரவியுள்ளதுடன், ஆறு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தரவுகளின்படி, நேற்றைய தினம் 1,712 புதிய கோவிட் வழக்குகள் மற்றும் 11 உயிரிழப்புகள் பதிவாயிகிருந்தது.
கடந்த திங்கட்கிழமை, பிரித்தானியாவில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. இது கடந்த ஏழு மாதங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
கடந்த ஆண்டு உருமாறிய கோவிட் - 19 தொற்றினால் மிகக்கடுமையான பாதிப்பை பிரித்தானியா எதிர்கொண்டது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய அரசாங்கம், தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்ததும் அந்தப் பணியையும் தீவிரப்படுத்தியது.
இதன் பலனாக தற்போது, கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 33.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 12.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19ம் திகதியின் பின்னர் பிரித்தானியாவில் கோவிட் பரவல் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானியாவில் கோவிட் - 19 வைரசின் அடுத்த அலை தாக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் எனவே, மக்கள் வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.