பிரித்தானியாவில் ஐந்து மாதங்களின் பின்னர் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவானது!
பிரித்தானியாவில் ஐந்து மாதங்களில் பின்னர் இன்றைய தினம் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான நாளாந்த கோவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்றைய தினம் 146 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் 23,510 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,117,540 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் 12ம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் இதே நாளில் 138 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.
இதுவரையில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 130,503 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,291,739 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 859 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,695,298 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் வயதானவர்களில் முக்கால்வாசி பேர் கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தில் மொத்தம் 86,780,455 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, தடுப்பூசியின் முதல் அளவை 47,091,889 பேரும், இரண்டாவது அளவை 39,688,566 பேரும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.