ஜீ.எஸ்.பி.பிளஸூக்கு பதிலாக பிரித்தானியாவின் புதிய வரிச் சலுகை:இலங்கைக்கும் வாய்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கு பதிலாக பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வர்த்தக யோசனை முறையான டி.சீ.ரீ.சீ (DCTC)முறையின் கீழ் உள்ள நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக பிரித்தானியா இந்த வரிச் சலுகை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 80 சத வீதத்திற்கும் மேலான வரிச் சலுகையுடன் பிரித்தானிய சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட 65 நாடுகளுக்கு வரிச் சலுகை
இந்த வரிச் சலுகை தொடர்பாக பிரித்தானிய இன்று அறிவித்துள்ளதுடன் இதன் மூலம் 65 நாடுகளுக்கு பிரித்தானியாவின் வரிச் சலுகை கிடைக்கும்.
இதில் ஆபிரிக்கா, ஆசிய உட்பட பொதுநலவாய நாடுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த புதிய வரிச் சலுகையின் கீழ் ஒரு ஆண்டுக்கு 750 மில்லியன் பவுண்ட் பெறுமதியான உணவு, ஆடைகள் உட்பட பல பொருட்களை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விலகியது. இதன் காரணமாக பிரித்தானியா தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் உள்ளடங்காது.