பிரித்தானியாவின் புதிய சிக்கலை உடன் சீர்செய்ய இராணுவம் தயார் நிலையில்!
பிரித்தானியாவில் 100,000 இக்கும் அதிகமான பாரஊர்தி ஓட்டுனர் தேவையினைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில், உணவுப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பயத்தினால், வாகன உரிமையாளர்கள் அதிக அளவிலான எரிபொருட்களைக் கொள்வனவுசெய்து வருகின்றனர். இதனால் வழமைக்கு மாறாக எரிபொருள் நிலையங்களில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் பல நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல எரிபொருள் நிலையங்களில் வழமைவிட 500% அதிகமான எரிபொருட்கள் விற்பனையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. திடீரென அதிகரித்த எரிபொருள் விற்பனையால் பல நிலையங்களால் மேலதிக எரிபொருள் கொள்வனவு செய்யமுடியாத நிலையால் மூடப்பட்டது மேலும் மக்கள் மத்தியில் பயத்தினை அதிகரித்துள்ளது.
விநியோகத் தட்டுப்படு நிலையில் சுகாதார மற்றும் சமூகப்பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற முக்கிய தொழிலாளர்களுக்கு எரிபொருள் கொள்வனவுசெய்ய முன்னுரிமை கொடுக்குமாறு பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையினை தற்காலிகமாக சீர்செய்வதற்கு 150 இராணுவ எரிபொருள் விநியோக ஓட்டுனர்களை பயன்படுத்த தயார் நிலையில் வைத்துள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
வானக ஓட்டுனர்கள் தேவையில்லாது, பயத்தின்மூலம் அதிகம் கொள்வனவு செய்யாது, வழமையான கொள்முதல்களை செய்வதன்மூலம் நாடு வளமை திரும்பும் என பிரித்தானிய அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.