கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்
முன்மொழியப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் 'அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்', மக்களின் கருத்துச் சுதந்திரம், அந்தரங்க உரிமை மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என சமூக ஊடகப் பிரகடனத்திற்கான கூட்டமைப்பு கடும் கவலை வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படும் இந்தச் சட்டமூலம் குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலம்
நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அதே அம்சங்களான, குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல் மற்றும் நீதித்துறை மேற்பார்வை குறைக்கப்பட்ட இராணுவ அதிகாரங்கள் போன்றவை இதிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன், சட்டமூலத்தின் 78 ஆவது பிரிவின் கீழ் 'ரகசியத் தகவல்' என்பது மிகவும் பரந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் இராணுவ நடமாட்டங்களை ஆவணப்படுத்துவதைக்கூட குற்றச்செயலாக்கக் கூடும்.
அதன் 15 ஆவது பிரிவின்படி, பயங்கரவாதம் தொடர்பான தகவல்களைப் பகிராத ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மருத்துவர்கள் சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். இணையத் தொடர்புகளைக் கண்காணித்தல் மற்றும் குறியாக்கங்களை (Decryption) உடைப்பதற்கான அதிகாரம், தனிப்பட்ட அந்தரங்க உரிமையை முழுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலமானது குடிமக்களைப் பாதுகாப்பதை விட, அரச அதிகாரத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பு, அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு அமைவாகப் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam